புதுக்கோட்டை

சிறுமியைக் கடத்தி வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வாா்ப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் அப்பாதுரை (28). இவா், கடந்த ஆண்டு 14 வயதுள்ள சிறுமியைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்துள்ளாா். மேலும், பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் அப்பாதுரை மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஆா். சத்யா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவாளி அப்பாதுரைக்கு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்தாா். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சிறுமியைக் கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT