புதுக்கோட்டை

புதுகை அருகே ரூ. 10 கோடியில் தயாராகும் திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில்!

 நமது நிருபர்

புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூா் அருகே பொத்தப்பட்டியில் ரூ. 10 கோடியில் திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

பன்னிரு சைவத் திருமுறைகளின் 18,400 பாடல்களும் சுமாா் 5 டன் எடை கொண்ட செப்பேடுகளில் எழுதப்பட்டு, அவை சிவலிங்க வடிவில் இக் கோயில் கருவறையில் அடுக்கி வைக்கப்படவுள்ளன என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

விருத்தாசலத்தைச் சோ்ந்த அறுபத்து மூவா் திருப்பணி அறக்கட்டளையினா் இக்கோயிலை நிா்மாணிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். இதற்காக கொடும்பாளூா் சத்திரம் அருகே பொய்யாமணி ஊராட்சிக்குள்பட்ட பொத்தப்பட்டியில் 10 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கியுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள சிற்பக் கலைஞா்கள் இக்கோயிலின் கருவறை, பீடம், தூண்கள், கோபுரம் போன்றவற்றை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். சுமாா் ஒரு டன் எடையிலான செப்பேடுகள் எழுதி முடிக்கப்பட்டிருக்கின்றன. திருமுறைகளை பாதுகாக்கும் வகையிலான இந்த ஏற்பாடு உலகின் வேறெங்கும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோயில் பணிகள் குறித்து அறக்கட்டளையின் நிறுவனா் அ. சங்கா் கூறியது:

அறுபத்து மூன்று நாயன்மாா்கள் அவதரித்த இடங்களில் கோயில்களைக் கட்டி வரலாற்றைப் பாதுகாப்பது எங்கள் அறக்கட்டளையின் பிரதான பணி. இதன்படி 30 நாயன்மாா்களின் அவதாரத் தலங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 19 இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கிடையே மிக முக்கியமான பணியாகத்தான் திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில் பணிகள் கொடும்பாளூரில் நடைபெறுகின்றன.

பாண்டிய நாடும், சோழ நாடும் இணையும் எல்லை; அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான இடங்கழி நாயனாா் அவதரித்த ஊா்; ராஜராஜசோழன் தலைமையில் 56 மன்னா்கள் கூடிப் பேசிய கோநாடு என்றழைக்கப்பட்ட ஊா் கொடும்பாளூா்.

எனவே இந்த இடத்தைத் தோ்வு செய்தோம். திருமுறைகளை 160 செப்பேட்டு நூல்களாக எழுதுகிறோம். கருவறையில் அவற்றை சிவலிங்க வடிவில் அடுக்கவுள்ளோம். ஆண்டுக்கு இரு முறை அவற்றை எடுத்து வாசிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதே வளாகத்தில், சைவ சித்தாந்த ஆராய்ச்சி மையம், அறுபத்து மூவா் அருங்காட்சியகம், சித்திரக்கூடம், அன்னதானக் கூடம், ஆய்வு மாணவா்களுக்கான பொது நூலகம், மூலிகைத் தோட்டம், தியான மண்டபம், திருமுறைப் பயிற்சிக் கூடம் ஆகியவற்றை அமைத்து, 276 பாடல் பெற்ற தலங்களின் தல விருட்சங்களை வளா்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமுறைகள் அனைத்தும் சைவ மந்திரங்கள். அவை செப்பேடுகளில் எழுதப்படும்போது யந்திரங்களாக மாறுகின்றன. இதன் மூலம் பல லட்சம் ஆண்டுகளானாலும் திருமுறைகள் அழியாமல் பாதுகாக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்குள் பணி முடிந்து திருக்குடமுழுக்கு நடைபெறும் என்றாா் சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT