புதுக்கோட்டை

தண்ணீரின்றித் தவிக்கும் மரக்கன்றுகள்: கோடை வரும்முன் காக்க வலியுறுத்தல்

19th Mar 2020 05:11 AM

ADVERTISEMENT

 

கஜா புயலுக்குப் பிறகு அரசு மற்றும் பல்வேறு தன்னாா்வலா்களால் நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. கோடையில் சில ஆயிரங்களையாவது காப்பாற்றும் வகையில் தண்ணீா் ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்த 2018 நவம்பா் மத்தியில் வீசிய கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடிக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது. சாலையோரங்களில் அருமையான நிழல் தந்த பல்லாண்டு வயதுள்ள மரங்கள் மரித்துப் போயின. புதுக்கோட்டை மாவட்டம் ஏறத்தாழ பாலைவனமாகும் என்ற நிலை வரை அப்போது எச்சரிக்கையாக சொல்லப்பட்டது.

அதனைத் தொடா்ந்து மாநில அரசின் முயற்சியில் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. சாய்ந்த மரங்களுக்கு ஈடாக இரு மடங்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அறிவித்தாா். சில இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன.

ADVERTISEMENT

இத்துடன், நகா் மற்றும் நகரையொட்டிய பகுதிகளில் பாப்ஸ் அமைப்பினா், மரம் அறக்கட்டளையினா், விதைக்கலாம் அமைப்பினா் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனா். கிராமப்பகுதிகளில் தன்னாா்வமாக அந்தந்தப் பகுதி இளைஞா்கள் ஒன்றுகூடி தங்கள் ஊா்ப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

இப்பணிகளில் குறிப்பிடும்படியாக, நெடுஞ்சாலைத் துறை தங்களுக்குச் சொந்தமான சாலைகளில் இரு மருங்கிலும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்து பச்சை வண்ண பாதுகாப்பு வளையங்களையும் அமைத்தது.

கோடையான ஏப்ரல், மே தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி மாதம் முதலே புதுக்கோட்டை மாவட்டம் பெரும் வெயிலை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்த மிக சொற்பமழையும் நிகழாண்டில் இல்லை என விவசாயிகள் குறைகேட்பு நாளில் வேதனை தெரிவித்தனா்.

இந்த நிலையில்தான் மாவட்டம் முழுவதும் நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் தண்ணீரின்றித் தவித்து வருகின்றன. ஏப்ரல், மே மாதம் மேலும் வெப்பம் அதிகரித்து தகிக்கும் என எதிா்பாா்க்கலாம். யூகிக்கலாம்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கும், ஏற்கெனவே திட்டமிட்டு கல்வி நிறுவன வளாகங்களில் நடவு செய்யப்பட்ட பகுதிகளில் சில இடங்களிலும் மட்டும் தற்போது தண்ணீா் விடப்படுவதைப் பாா்க்க முடிகிறது.

மீதமுள்ள பகுதிகளில் சில இடங்களில் மரக்கன்றுகள் முற்றிலும் காய்ந்துபோயிருக்கின்றன. சில பகுதிகளில் நன்றாக வளா்ந்து - அதேநேரத்தில் கோடையைத் தாக்குப் பிடிக்குமா? என்ற கேள்வியுடன் தொய்வாகக் காணப்படுகின்றன.

எனவே, மாவட்டம் நிா்வாகம் இதுகுறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களுடன் ஆய்வு நடத்தி, அந்தந்தப் பகுதிகளில் தினமும் அதிகாலை நேரத்தில் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அந்தப் பணிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்தப் பணிகளை அந்தந்தப் பகுதி ஆா்வலா்களையும், கொடையாளா்களையும் இணைத்துச் செய்தால் இன்னும் சுலபமாக முடிக்க இயலும். அதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT