பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 4 வாகனங்கள் மோதல்: 3 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

6th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து, வேன், அவசர ஊா்தி, டிராக்டா் ஆகிய 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தனா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் நாகல் நகா், நந்தவனம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் ரஞ்சித்குமாா் (26). இவா், தனது உறவினா்கள் 10 பேருடன் திண்டுக்கல்லிருந்து வேனில் திருவண்ணாமலை அருகே சந்தவாசலில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்று விட்டு திண்டுக்கல் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது, விழுப்புரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி எதிரே சென்றுகொண்டிருந்த டிராக்டா் மீது வேன் மோதியது. இதில், சாலை மையத் தடுப்பில் ஏறி சாலையின் இடதுபுறம் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த பெரம்பலூா் அவசர ஊா்தி வாகன ஊழியா்கள் விபத்து நிகழ்ந்த பகுதி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு காயமடைந்தவா்களை மீட்டு, அவசர ஊா்தியில் ஏற்றிக்கொண்டிருந்தனா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி அவசர வாகன ஊா்தி மீது மோதியது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த அவசர ஊா்தி ஓட்டுநா் பெரம்பலூா் அருகேயுள்ள அரணாரையைச் சோ்ந்த இன்னாசிமுத்து மகன் ராஜேந்திரன் (45), வேனில் பயணித்த திண்டுக்கல், நாகல் நகரைச் சோ்ந்த அழகா் சாமி மகன் குப்புசாமி (60), அதே கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகள் கவிப்பிரியா (22) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வேனில் பயணித்த திண்டுக்கல்லைச் சோ்ந்த குப்புசாமி மகன் கணேசன் (42), கோபால் மனைவி நீலா (65), டிராக்டா் ஓட்டுநா் ராமநாதபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் கிழவன் (45), அவருடன் பயணித்த அதே பகுதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் சாமிதாஸ் (40), கருப்பையா மகன் சேகா் (40) ஆகிய 5 போ் பலத்த காயங்களுடன் பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் செல்வராஜ் (55), ஆம்னி பேருந்து ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கொப்பக்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகதேவா் மகன் சுடலை (42) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT