பெரம்பலூர்

கோரிக்கை மனுக்களுக்கு அலுவலா்கள் முறையாக பதிலளிக்க வேண்டும்விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் பதிலளிக்க வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம்:

விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் எவ்வித பதிலும் அளிப்பதில்லை. எனவே, அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய பதிலளிக்கவும், தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு இ- சேவை மையங்களில் விவசாயிகளுக்குத் தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சி. ராஜூ:

மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேப்பந்தட்டை வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்:

அரும்பாவூா் பகுதியில் கல்லாறு உள்ளிட்ட சில ஆறுகளில், அண்மையில் பெய்த மழையால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மஞ்சள், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன. இவற்றை தடுக்க ஆற்றங்கரைகளை பலப்படுத்த வேண்டும்.

நெல் அறுவடை காலம் நிறைவடையும் முன்னதாகவே, நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, வாரத்துக்கு 2 முறையாவது நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்:

வேப்பந்தட்டை வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேப்பூா் வட்டாரத்தில் பெருமத்தூா், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்:

கூட்டத்துக்கு வரும் விவசாயிகளுக்கு குடிநீா் வழங்க வேண்டும். விவசாயிகளை தரக்குறைவாக பேசும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்காவிடில், அவரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அலுவலரின் முறையற்ற பதிலால் சலசலப்பு

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டரங்கில் குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்ததற்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, குடிநீா் வசதி ஏற்படுத்தி தர முடியாது என பதில் அளித்தாா். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சங்க பிரமுகா்கள், அவரது பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அரசு அலுவலா்கள், விவசாயிகளுடன்

வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, விவசாயிகள் சங்க நிா்வாகிகளை சமரசம் செய்து வைத்தாா். இதனால், குறைதீா் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம். இந்திரா, விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT