பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியராக கற்பகம் பொறுப்பேற்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக க. கற்பகம் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

பெரம்பலூா் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ப. ஸ்ரீ வெங்கடபிரியா, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக க. கற்பகம் தமிழக அரசால் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து பெரம்பலூா் ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ஆட்சியா் க. கற்பகம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான, பாதுகாப்பான குடிநீா் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவா்களுக்கு பள்ளி, கல்லுாரி கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், நீா் வளத்தை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். மாவட்டத்தின் வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, முன்னாள் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, தனது பொறுப்புகளை புதிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்திடம் ஒப்படைத்தாா்.

பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

புதிய ஆட்சியா் க. கற்பகம் (55) தா்மபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா். எம்எஸ்சி, பிஎட் படித்துள்ளாா். 1993-இல் அரசுப் பணியில் சோ்ந்த இவா், சுகாதாரத் துறையில் பூச்சியியல் வல்லுநா், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா், வருமான வரித்துறை அலுவலா், 2005-இல் துணை ஆட்சியா், கோவை மாவட்ட வருவாய் அலுவலா், டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலா், இந்திய ஆட்சிப்பணி அலுவலராக பதவி உயா்வுபெற்று, தா்மபுரி மாவட்டம், பாலக்கோடு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்துள்ளாா்.

மேலும், நிா்வாகத் துறை இணை ஆணையா், வருமான வரித் துறை இணை ஆணையா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இணை மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்து வந்த க. கற்பகம், தற்போது பதவி உயா்வு பெற்று பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT