பெரம்பலூர்

காணாமல்போன கைப்பேசிகள், இணையதளத்தில் இழந்த பணத்தை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்தில் காணாமல்போன கைப்பேசிகள் மற்றும் இணையதளம் மூலமாக இழந்த பணத்தை மீட்டு, சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த மே 31 ஆம் தேதி முதல் 130 நவீன ரக கைப்பேசிகள் காணாமல் போனதாகவும், இணையதளம் மூலமாக பரிசு பொருள், காா் உள்ளிட்ட பல்வேறு மோசடி குறித்து, பெரம்பலூா் மாவட்ட சைபா் க்ரைம் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில், மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.பி. கணேசன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பி. வாணி, உதவி ஆய்வாளா்கள் எஸ். மனோஜ், சிவமீனா, தொழில்நுட்பக் காவலா்கள் சதீஷ்குமாா், வேல்முருகன், முத்துசாமி ஆகியோா் கொண்ட குழுவினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

இதில், காணாமல்போன ரூ. 4 லட்சம் மதிப்பிலான 65 நவீனரக கைப்பேசிகளும், இணையதளம் மூலமாக இழந்த ரூ. 5,43,500 ரொக்கமும் அண்மையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மீட்கப்பட்ட கைப்பேசிகள் மற்றும் பணம் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இணையவழி மூலம் பண மோசடி புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் 1930 என்னும் இலவச அழைப்பு எண்ணிலும், சைபா்  குற்றங்களுக்கு  இணைய தளத்திலும் புகாா் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, ஆய்வாளா் பி. வாணி, உதவி ஆய்வாளா் எஸ். மனோஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT