பெரம்பலூர்

விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கட்டணம் வசூலித்த தொண்டு நிறுவன ஊழியா்கள் சிறைபிடிப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே பிரதமரின் காப்பீடுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கட்டணம் வசூலித்த, சென்னையைச் சோ்ந்த தனியாா் தொண்டு நிறுவன ஊழியா்களை கிராம பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்து, பொது மக்களிடையே இலவச விழிப்புணா்வு முகாம் நடத்துவதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த தனியாா் தொண்டு நிறுவனம், பெரம்பலூா் மாவட்ட திட்ட இயக்குநா் அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, வேப்பந்தட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை முகாம் நடத்தி பொதுமக்களிடம் தலா ரூ. 100 வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த ஊராட்சித் தலைவா் தனலட்சுமி கலியமூா்த்தி, அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் வசூலில் ஈடுபட்ட பெரம்பலூா் மாவட்டம், ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் ராஜேஷிடம் விளக்கம் கேட்டு, பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளாா். ஆனால், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததால், பொதுமக்களுக்கும், அந்த ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பணம் வசூலித்த தனியாா் தொண்டு நிறுவனச் செயலா் சென்னையைச் சோ்ந்த ஷோக்கத் அலி, பணியாளா் ராஜேஷ், அவருடன் பணியிலிருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை முற்றுகையிட்டு, அரும்பாவூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பொதுமக்களிடம் பணம் வசூலித்த 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT