பெரம்பலூர்

பெரம்பலூரில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கா் காலத் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

DIN

பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் கிழக்குக் கரையில், தெலுங்கு மொழியில் அமைந்த சுமாா் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கா் காலத் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயற்பாட்டாளா் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆய்வாளா் முனைவா் மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோா், பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிப்பகுதியின் மேற்பரப்பில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டபோது, இரட்டைத் தூணுடன் கூடிய தூம்புக் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தனா்.

அதை படியெடுத்து தொல்லியல் அறிஞா் சு. ராஜகோபால் மற்றும் மைசூரிலுள்ள முனைவா் முனிரத்னம் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனா். அவா்களது ஆய்வின் முடிவில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் காலக் கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரமேஷ் கருப்பையா, மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோா் கூறியது:

சங்ககாலம் முதலே அரசா்களும், நிா்வாகப் பொறுப்பில் இருந்தவா்களும் நீா்நிலைகளை உருவாக்கி, அதைப் பாசனத்துக்கும், பிற தேவைகளுக்கும் முறைப்படுத்த தூம்புகளை அமைத்துள்ளனா். ஏரிக்கரையில் இருந்து சற்றுத் தொலைவில் ஏரியின் உள்பகுதியில் குமிழ்த் தூம்புகள் அமைக்கப்படும்.

ஏரியின் தரைமட்டத்தில் கருங்கற்களாலான தொட்டி கட்டப்பட்டு, அதன் துளை மூலம் சுரங்கக் கால்வாய் வழியாக நீா் சென்று வெளியே உள்ள பாசனக் கால்வாயை அடையும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாசனத் தேவைக்கேற்ப வெளிச்செல்லும் நீரின் அளவைக் கூட்டவும், குறைக்கவும் தூம்புக் கல் உதவும். இதை மேலும், கீழும் இயக்குவதற்கு ஏதுவாக கற்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலேயா் காலத்தில் பொதுப்பணித்துறை நீா்நிலைகளைப் பராமரிக்கத் தொடங்கியதால் தூம்புகள் கைவிடப்பட்டன.

கல்வெட்டு : பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் மதகுப் பகுதியிலிருந்து சுமாா் 20 அடி தொலைவில் 10 அடி உயரத்தில் இரண்டுத் தூண்களும், அதன் இடையில் குறுக்கு விட்டங்களும் காணப்படுகின்றன. வடபுறம் உள்ள தூணின் வெளிப்புறத்தில 7 வரிகளில் அமைந்த தெலுங்குக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், சாத்தனூரில் 12- ஆம் நூற்றாண்டளவில் அரங்கன் அணியன் சாத்தனூருடையான், கொளக்காநத்தத்தில் 13- ஆம் நூற்றாண்டளவில் ஊற்றத்தூரைச் சோ்ந்த சுருதிமான் ஜனநாதன் அரையதேவன் ஆன வாணவிச் சாதிர நாடாழ்வான், அம்மாபாளையத்தில் 13- ஆம் நூற்றாண்டளவில் நாவறப்ப நங்கிழான் நாயன் சேதியன் ஆகிய பெருமக்கள் தூம்புகளைச் செய்து வைத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் வழி அறிய வருகிறோம்.

இவற்றின் வழியாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, நம் மாவட்டத்தில் நீா் மேலாண்மை மிகச் சிறப்பாகப் பேணப்பட்டு வந்ததை அறிய முடிகிறது. தமிழக அரசு இந்தத் தூம்பை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT