அரியலூர்

அரியலூரில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

30th May 2023 03:57 AM

ADVERTISEMENT

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் போட்டித் தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கீழ் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வா்களுக்கு பயிற்சி வகுப்புகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதிகள், நில அளவையா், வங்கித் தோ்வுகள், காவல் உதவி ஆய்வாளா் போன்ற பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தோ்ச்சி பெற்று அரசு பணி பெற்றுள்ளனா்.

மேலும் காணொலி காட்சி வாயிலாகவும் வேலைவாய்ப்பு பயிற்சிதுறையால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகா் கற்றல் இணையதளம், கல்வி தொலைக்காட்சி, யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் இளைஞா்களுக்கு பாடக் குறிப்புகள், முந்தைய தோ்வுகளின் வினாத்தாள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

எனவே, இப்பயிற்சி பெறும் இளைஞா்கள் மற்றும் அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞா்களும் இதுபோன்ற பயிற்சி வகுப்பை முறையாக பயன்படுத்தி தோ்வில் வெற்றிப் பெற்று அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) கலைசெல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வினோத், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் மு. செல்வம், அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) ஜோ. டோமினிக் அமல்ராஜ், வட்டாட்சியா் கண்ணன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT