அரியலூர்

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ்மகளிா் குழுவுக்கு உணவு தயாரிக்கும் பயிற்சி

27th May 2023 12:34 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம் திருமானூரில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்த பயிற்சி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், மகளிா் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு காலை உணவு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியலூா் மாவட்டம் திருமானூா் வட்டாரத்தில் 74 தொடக்கப்பள்ளிகளில் இத் திட்டத்தை செயல்படுத்த மகளிா் குழுவினருக்கு உணவு தயாரிக்கும் பயிற்சி, திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்தது.

பயிற்சியை ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, ஜாகிா்உசேன், மகளிா் உதவித் திட்ட அலுவலா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இப் பயிற்சியில் 13 வகை உணவுகளைச் சமைப்பது குறித்து 3 பயிற்றுநா்களால் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா உப்புமா உள்ளிட்ட உணவு வகைகள் செய்து காண்பிக்கப்பட்டன. மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 222 போ் பயிற்சி பெற்றனா். இதற்கான நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மகளிா் உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன், வட்டார இயக்க மேலாளா் ராமலிங்கம், தலைமையிடத்துத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லதா, விஜயசுந்தரி மற்றும் பயிற்றுநா்கள், மகளிா் குழுவினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT