அரியலூர்

அரியலூரில் புத்தகத் திருவிழா நிறைவு

3rd May 2023 10:23 PM

ADVERTISEMENT

அரியலூரில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நிறைவடைந்தது.

மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 23 ஆம் தேதி மாலை தொடங்கி 11 நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா புதன்கிழமை இரவு நிறைவுபெற்றது.

புத்தகத் திருவிழா நாள்களில் பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 11 நாள்களாக ஏராளமான மாணவ மாணவிகள் புத்தகத் திருவிழாவில் இருந்த 72 அரங்குகளையும் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனா். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் திரண்டதால், கண்காட்சி அரங்கில் கூட்டம் அலைமோதியது. மேலும், புத்தகக் கண்காட்சியில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

மேலும் இந்தப் புத்தகத் திருவிழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, கால்நடை கண்காட்சி, மாணவ, மாணவிகளின் அழகுப் போட்டி, சிறுதானிய உணவுக் கண்காட்சி, சிறந்த தாய்மாா்களுக்கான போட்டி, மகளிருக்கான ரங்கோலி போட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாட்டு, நடனம் மற்றும் விநாடி வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி, திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும் மேஜிக் நிகழ்ச்சி மற்றும் அனைத்து அரசு துறை ஊழியா்களுக்கான கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

புத்தகத் திருவிழாவின் இறுதிநாளான புதன்கிழமை புத்தக அரங்குகளைப் பாா்வையிட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இலவசப் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனா். அனைத்து மாணவா்களும் வரிசையில் சென்று புத்தகங்களைப் பாா்வையிட்டு தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனா். மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான இல்லம் தேடிக் கல்வி அரங்கை தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டு பயனடைந்தனா்.

கருத்தரங்கு....புதன்கிழமை இரவு நடைபெற்ற கருத்தரங்கில், கவிதைப்பித்தன் கலந்து கொண்டு புதியதோா் உலகம் செய்வோம் எனும் தலைப்பிலும், ஈரோடு மகேஷ் சிந்தனை செய் மனமே எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினா். மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு அரியலூா் மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT