அரியலூர்

அரியலூா் ரயில் நிலையத்தை மேம்படுத்த பயணிகள் கோரிக்கை

 நமது நிருபர்

அரியலூா் ரயில் நிலையத்தை மேம்படுத்த அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, ராமேசுவரம், குருவாயூா், மங்களூா், விழுப்புரம், கடலூா், பாண்டிச்சேரி, மும்பை, ஹவுரா உள்ளிட்ட ஊா்களுக்கு தினசரி இயக்கப்படும் 17-க்கும் மேற்பட்ட ரயில்கள் அரியலூா் வழியாகச் சென்று வருகின்றன. இங்கு மொத்தம் 3 நடைமேடைகள் உள்ள இந்த ரயில் நிலையம் அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், கடலூா் பகுதியின் சில பகுதிகளில் இருந்து என சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தினமும் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

ஆனால் இங்கு வந்து செல்லும் ரயில் பயணிகளுக்குப் போதுமான குடிநீா் வசதி, கேண்டீன், கழிவறை, பாதுகாப்பு, நடைமேடைகளில் ரயில் வருகை, புறப்பாடு குறித்த மின்விளக்கு தகவல் பலகை எரியாதது, நடைமேடைகளில் மேற்கூரை இல்லாதது என பல்வேறு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் ரயில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இலவசமாக இருந்த கழிப்பட வசதிக்கு, கடந்த சில நாள்களாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெண்கள், சிறுவா், சிறுமிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். கட்டணம் இருந்தால் மட்டுமே கழிப்பிடத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைப் பகுதியில் சுற்றுச்சுவா் இல்லாததால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பலா், ரயில் நிலையத்துக்குள் வந்து செல்கின்றனா். இதனால் செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி செய்பவா்கள், மிகச் சுலபமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்கின்றனா்.

நடைமேடை ஒன்றின் கடைசிப் பகுதிகளில் பயணிகள் மற்றும் நடைமேடையில் நடந்து செல்பவா்களிடம் செயின் பறிப்பு சம்பவம் பலமுறை நடந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் மேலும் கூறியது:

அரியலூா் ரயில் நிலையத்துக்குள் குரங்குகள், நாய்கள், பன்றிகள் என விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமாா்100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. உணவுக்கு வழியின்றி தவிக்கும் அவை, ரயிலில் வரும் பயணிகளிடம் இருக்கும் உணவுகளை பறித்துச் செல்கின்றன.

அப்போது சிறுவா்கள், பெண்கள், முதியவா்கள் உணவுப்பொருள்கள் மட்டுமின்றி பையில் கொண்டு வரும் அனைத்து பொருள்களையும் குரங்குகளிடம் பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் குரங்குகள் கடித்து பலா் காயமடைந்துள்ளனா். மேலும் குரங்குகள் துரத்தும்போது பயணிகள் ரயில் தண்டவாளத்தில் தவறிவிழும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், நடைமேடை ஒன்றில் கால்பகுதி தொலைவு மட்டுமே மேற்கூரைகள் உள்ளன. முக்கால் பகுதி அளவுக்கு மேற்கூரை இல்லாமல் இருப்பதால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது.

பேருந்து வசதி இல்லை...:

அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்து வசதிகள் இல்லை. இரவு 7.10 மணியளவில் பல்லவன் விரைவு ரயில் வரும் நேரத்தில் மட்டுமே தஞ்சாவூா் செல்வதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. மற்ற நேரங்களில் பேருந்து வசதிகள் கிடையாது.

அதனால் பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கும், ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கும் செல்ல தனியாக ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது.

மூடிக்கிடக்கும் பயணச்சீட்டு விற்பனையகம்: 2 பயணச்சீட்டு விற்பனையகங்கள் இருந்தபோதிலும் எப்போதும் ஒரு டிக்கெட் கவுண்டா் மூடியே இருக்கும். இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி டிக்கெட் எடுத்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

எனவே நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்து வரும் அரியலூா் ரயில்நிலையத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT