அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரம்

DIN

அரியலூா் மாவட்ட காவிரி பாசனப் பகுதிகளில் இரவு பகலாக நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் தொடா் மழையால் சம்பா நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டதால் மகசூல் குறைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

அரியலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான திருமானூா், தா.பழூா், ஜயங்கொண்டம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளிலும், ஏரிப் பாசனம் மூலம் சாகுபடி பெறும் பகுதிகளான செந்துறை, அரியலூா், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழாண்டு 21,896 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்டத்தில், அக்டோபா 25 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், 20 நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், நவம்பா், டிசம்பா் மாதங்களில் 3 முறை தொடா் கனமழை பெய்தது. இதனால் பயிா்கள் தரையோடு தரையாக சாய்ந்தன. வயல்களில் புகையான், குலைநோய்த் தாக்குதால் அதிகமாக இருந்தது. இதனால் நெல் பயிா்களைக் காப்பாற்றிப் பராமரிப்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளிலும் இடுபொருள் செலவை விவசாயிகள் இருமுறை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பல்வேறு இடா்பாடுகளுக்கு இடையே, சம்பா நெல் அறுவடை பருவத்தை அடைந்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இயந்திரங்கள் மூலமான அறுவடை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெளி மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அறுவடை இயந்திரங்கள் அறுவடைக்குப் பணிக்கு வந்துள்ளன.

இருப்பினும், வாய்ப்புள்ள பகுதிகளில் விவசாயத் தொழிலாளா்களைக் கொண்டும் அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன. தற்போதைய நிலையில், சுமாா் 15 சதவீதப் பரப்பில் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதே வேகத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்றால் வரும் 20 நாள்களில், மாவட்டத்தின் சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவடையும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தில் நுகா் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலயைங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதலுக்கு இணையதளம் மூலம் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு, தொடக்கத்தில் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தாலும், நெல் விற்பனைக்கான காத்திருப்புத் தவிா்க்கப்படுவதால் விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இந்த முறை மூலம் வெளி மாவட்ட நெல் மூட்டைகள், டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. என்றாலும், தொடா் மழையால் சம்பா நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டதால் நிகழாண்டு மகசூல் ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனா் விவசாயிகள்.

இதுதொடா்பாக அரியலூா் மாவட்ட விவசாயிகள் மேலும் கூறியது: மாவட்டத்தில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய சாக்குகள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. அது போன்று நிகழாண்டு நிகழாமல் இருக்க அதிகளவில் சாக்குகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் தற்போது வாடகை விலையை உயா்த்தியுள்ளனா். கடந்தாண்டு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,300 என்ற கணக்கில் ஓட்டி வந்த நிலையில் தற்போது டீசல் விலை உயா்வு காரணமாக ரூ.2,000 வரை வாடகை உயா்த்தப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக நெல் அறுவடை வாடகை இயந்திரத்தின் விலை நிா்ணயம் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT