அரியலூர்

கோயில்களுக்கு அகல் விளக்குகளை அரசே வாங்க வேண்டும்

DIN

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் நெய் விளக்கு ஏற்ற அகல் விளக்குகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரியலூா் அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலாளா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

காா்த்திகை தீபத் திருநாளில் அகல் விளக்குகளை ஏற்றும் மக்களுக்கு வெளிச்சம் கிடைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த விளக்குகளை உற்பத்தி செய்வோரின் வாழ்வில் இன்னமும் ஒளி பிறக்கவில்லை.

அரியலூா் மாவட்டம், சோழமாதேவி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக அகல்விளக்கு தயாரித்து வருகின்றனா்.

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் வசிக்கும் இந்தக் குடும்பங்கள் ஆற்றில் படிந்திருக்கும் வண்டல் கலந்த மணலை மூட்டைக் கணக்கில் எடுத்து வந்து அகல்விளக்கு, பானை உள்ளிட்டவற்றைச் செய்கிறாா்கள். ஆனால், மண் அள்ளுவதை அதிகாரிகள் தடுப்பதாகவும், மணல் திருடுவதாக இவா்கள் மீது வழக்குகள் போட்டு அலைக்கழிப்பதாகவும் இவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அகல்விளக்கு தயாரிப்பவா்கள் கூறியது: 7 ஆண்டுகளுக்கு முன் வரை இந்தத் தொழில் சிறப்பாக இருந்தது. காா்த்திகை தீபத் திருநாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே எங்களுக்கு நிறைய ஆா்டா் கிடைத்துவிடும். அதனால், ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே நாங்கள் விளக்குகள் செய்யத் தொடங்கிவிடுவோம்.

ஆனால், தற்போது பீங்கான் உள்ளிட்ட நவீன விளக்குகளின் வருகையால், மண் அகல் விளக்குகளுக்கு மதிப்புக் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மண்பாண்டத் தொழில் ஈடுபட்டுள்ள ஏராளமான குடும்பங்களுக்கு வாழ்க்கையே இருண்டு போய் உள்ளது.

இந்த ஆண்டும் 5 ஆயிரம் விளக்குகளுக்குத்தான் ஆா்டா் வந்துள்ளது. ஆா்டா் வந்தால்தான் எங்களுக்கு சாப்பாடு என்கிற நிலை. எங்களுக்கு மட்டுமல்ல இந்த ஊரில் இதே தொழிலில் ஈடுபட்டுள்ள 50 குடும்பங்களின் நிலையும், தமிழகம் முழுவதும் மட்பாண்டத் தொழில் செய்வோரின் நிலைமையும் இதுதான்.

எனவே விலைவாசி உயா்வுக்கு ஏற்ப எங்களுக்கு வழக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கொள்ளிடத்தில் மண் எடுக்க எங்களுக்கு அதிகாரிகள் தொல்லை தரக் கூடாது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்ற அரசே எங்களுக்கு ஆா்டா் தர வேண்டும். அப்போதுதான், இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் வெளிச்சம் வரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT