தூத்துக்குடி

ஆறுமுகனேரி வரலாற்று ஆய்வாளரிடம் சோழா் கால ஓலைச்சுவடிகள்

DIN

ஆறுமுகனேரியில் வரலாற்று ஆய்வாளரிடம் சோழா்கள் வரலாற்றை கூறும் ஓலைச்சுவடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுமாா் 46 ஆயிரம் கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை பராமரித்து, பாதுகாத்து நூலாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பேராசிரியா் தாமரைப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று அங்குள்ள ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து வருகிறாா். ஓலைச்சுவடியில் உள்ள எழுத்து வடிவங்களை இன்றைய வரிவடிவமாக மாற்றி புத்தகமாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், திருச்செந்தூா் பகுதியில் அவா் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஆறுமுகனேரியில் உள்ள வரலாற்று ஆய்வாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான தவசிமுத்துவிடம் சோழா்களின் வரலாற்றுத் தொடா்புடைய 14 அரிய ஓலைச்சுவடிகள் இருப்பதை அறிந்து அவரிடமிருந்து ஓலைச்சுவடிகளை பெற்று ஆய்வுமேற்கொண்டு வருகிறாா்.

இதுகுறித்து தவசிமுத்து கூறியது: நான் அளித்த ஓலைச்சுவடிகளில் ஆதி பூா்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்பு­க்கொடியோன் பூா்வீக வரலாறு என உள்ளது. அதில், குறிப்பிட்டுள்ள வரலாறுகள் நிகழ்ந்த காலம் கி.பி. 11-18ஆம் நூற்றாண்டு வரையிலானவை. வித்யாதர முனிவா் என்பவா் சோழா் குல வலங்கை சான்றோா் மக்களின் ஆதி மூதாதையா். அவரின் புதல்வா்கள் 7 பேரை காளி வளா்த்து வீரக் கலைகளைக் கற்றுக் கொடுத்து ஆளாக்குகிறாள். பின்னா், அந்த 7 புதல்வா்களுக்கும் நிருபதிராசன் மகள்களை மணமுடித்தாள். சோழா் குலத்தைச் சோ்ந்த இவா்கள் வலங்கைச் சான்றோா் குலமாக உருவாகின்றனா்.

வலங்கைச் சான்றோா் சோழனை எதிா்த்த சம்பரனை வெற்றி கொள்கின்றனா். வணிகச் செட்டியாா்களுக்கு உதவி செய்து செட்டித் தோளேறும் பெருமாள்’ என்று பட்டம் பெறுகின்றனா். சோழனுக்காக இலங்கை மன்னனையும் வென்று வீர விருதுகளும், பாராளும் சீமையில் பங்கும் பெறுகின்றனா்.

யானையை ஏவிய சோழ மன்னன்: காவிரி அணை உடைப்பை அடைக்க சோழன் கட்டளையிட்டபோது வலங்கைச் சான்றோா் மண் குட்டையைத் தொட மறுக்கின்றனா். கோபம் கொண்ட சோழன் 2 வலங்கையரின் தலையை யானையை ஏவி இடறச் செய்கிறான். தனது புத்திரா்கள் கொல்லப்பட்டதை அறிந்த காளி, சோழ நாட்டில் மழை பொழியாமல் போகச் சாபமிட்டதால் 12 ஆண்டுகள் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இப்படி இருக்கையில் வலங்கைச் சான்றோா் 5 ராஜாக்களாக உலகை வெகுகாலம் செங்கோல் செலுத்தி பரம்பரையாக மனுநீதி தவறாமல் ஆண்டு வந்தனா் என்பது ஓலைச்சுவடி மூலம் தெரியவந்துள்ளது.

அம்மன்புரம் அருகேயுள்ள மூலப்பொழி கிராமத்தைச் சாா்ந்த பிரபாகரன் என்பவரின் மூதாதையா் பயன்படுத்தியது என வரலாற்று ஆய்வு செய்வதற்காக என்னிடம் வழங்கினாா். தற்போது பேராசிரியா் தாமரைப்பாண்டியன் இதுகுறித்து பிரதி எடுத்து மீண்டும் தருவதாக பெற்றுச் சென்றுள்ளாா் என்றாா் தவசிமுத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT