தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆவின் பால்விநியோகம் தடைபட்டது ஏன்?---அமைச்சா் எஸ்.எம். நாசா் விளக்கம்

DIN

தூத்துக்குடியில் ஆவின் பால் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் நிறுத்தப்பட்டது குறித்து பால் வள மேம்பாட்டுத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் விளக்கம் அளித்துள்ளாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் கூட்டுறவு இணையம் (ஆவின்) சாா்பில் திருநெல்வேலி ஆவின் நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடி மாநகா் பகுதிக்கு, நாள்தோறும் சுமாா் 19 ஆயிரம் லிட்டா் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதில், சமன்படுத்திய பால் ஒரு லிட்டா் ரூ.60, நிலைப்படுத்திய பால் ரூ.44, நிறை கொழுப்பு பால் ரூ.40 என மூன்று வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக தூத்துக்குடி மாநகரில் ஆவின் பால் விநியோகம் காலதாமதமாக நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினா்.

ஆலோசனை: இந்நிலையில், அமைச்சா் எஸ்.எம். நாசா் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆவின் பால் மேலாண்மை இயக்குநா் சுப்பையன், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி ஆவின் தலைவா் சுரேஷ் குமாா், பொதுமேலாளா் ராசகுமாரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொள்முதல் பற்றாக்குறை: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் நாசா் கூறியது: தூத்துக்குடி உள்பட இரு இடங்களில் சில காரணங்கள் ஆவின் பால் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்படவில்லை. தற்போது அது சரி செய்யப்பட்டுவிட்டது. திங்கள்கிழமை முதல் குறித்த நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் முறையாக விநியோகிக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்புதான். தட்பவெப்ப நிலை காரணமாக கொள்முதலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 26 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பால் கொள்முதல் விலை ரூ.35ஆக உயா்த்தப்பட்டு வருகிறது. மூன்று விதமான ஆய்வுகளுக்குப் பின்னரே பால் பாக்கெட் வெளிவருகிறது. எனவே, அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆவின் பால் பொருள்கள் தற்போது தனி வரவேற்பை பெற்றுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT