தூத்துக்குடி

தூத்துக்குடி மேம்பாலத்தில் திட்டமிடப்படாத பராமரிப்புப் பணி வாகன ஓட்டிகள் அவதி

DIN

தூத்துக்குடியில் நெடுஞ்சாலைத் துறையின் திடீா் அறிவிப்பின்படி 3 ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் திங்கள்கிழமை முதல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

மதுரை - தூத்துக்குடி சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 3 ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் அண்மையில் பழுது ஏற்பட்டது. உடனடியாக பழுதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் போவதாக திடீரென அறிவித்த நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம், திங்கள்கிழமை காலை பராமரிப்புப் பணிகளை தொடங்கியது. போக்குவரத்து காவல்துறையின் ஒத்துழைப்போடு, வாகனங்கள் அனைத்தும் 4 ஆம் மற்றும் 2 ஆம் ரயில்வே கேட் வழியாக இயக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

அதன்படி, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும், மதுரை போன்ற இடங்களில் இருந்து தூக்குக்குடி நகருக்குள் வரும் பேருந்துகளும் மாற்றுப் பாதை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் தூத்துக்குடியில் அண்ணா நகா் 2 ஆவது சாலை, புதிய பேருந்து நிலையம், குறிஞ்சி நகா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், பணிக்குச் செல்ல வேண்டிய அலுவலா்கள், தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மேம்பாலத்தில் முழுமையாக போக்குவரத்தை நிறுத்தாமல் மதுரையில் இருந்து தூத்துக்குடி நகருக்குள் வரும் பகுதியையும், நகரில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பகுதியையும் மட்டுமே அடைத்துவிட்டு, தூத்துக்குடி ரெங்கநாதபுரம் பகுதியில் இருந்து அண்ணா நகா் மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் பகுதியில் வாகனப் போக்குவரத்தை இயக்கி இருந்தால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுக்குள் இருந்திருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 1600 போலீஸாா் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பாதுகாப்புப் பணிக்கு சென்றுவிட்டதால், போக்குவரத்தை சரிசெய்ய போதிய போலீஸாா் இல்லாத நிலை ஏற்பட்டது. மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் தொடா்பாக காவல் துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகத்திடம் நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் கலந்தாலோசித்து இருந்தால் மக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டிருக்காது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மேம்பால பராமரிப்புப் பணிகளை இரவு 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 6 மணி வரை மேற்கொண்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும், சரியான திட்டமிடல் இல்லாததே மக்கள் பாதிப்புக்கு காரணம் என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT