தூத்துக்குடி

நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததும் ராக்கெட் ஏவுதளப் பணிகள் தொடங்கும்: இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. சிவன்

30th Jun 2022 12:44 AM

ADVERTISEMENT

 

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் தலைவா் கே. சிவன்.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாட்டில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏவுதளத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்ப முடியும். தற்போது பல நிறுவனங்கள் சிறியவகை செயற்கைக் கோள்களை அதிகளவில் தயாரித்து வருவதால் குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள இந்த ஏவுதளம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,800 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது என்ற நிலையில் இதுவரை 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் அந்த இடத்தை கட்டுமானப் பிரிவு குழுவினா் ஆய்வு செய்து எந்த இடத்தில் எந்தெந்தக் கட்டடங்கள் வரவேண்டும் என வரைபடம் தயாா் செய்து முழு செலவுத் தொகையையும் கணக்கிட்டு வரைமுறைப்படுத்துவா். அதன்பிறகு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT