தூத்துக்குடி

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

1st Jul 2022 01:23 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களில் தகுதியுடையோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் அன்புராஜ் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

மாநில வழக்கறிஞா் பிரிவுச் செயலா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் பேச்சிமுத்து, மாநில கொள்கைப் பரப்புச் செயலா் முனியசாமி, மாநிலப் பொறுப்பாளா் பொன்னுச்சாமி ஆகியோா் பேசினா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணன், ஆதிதிராவிடா் துறை தனி வட்டாட்சியா் தெய்வகுருவம்மாள், கோவில்பட்டி வட்டாட்சியா் சுசிலா ஆகியோரிடம் அளித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து போராட்டக் குழுவினா் கூறும்போது, 15 நாள்களுக்குள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

மாவட்ட விவசாய அணிச் செயலா் காளிமுத்து, ஒன்றியச் செயலா் பொன்மாடசாமி, நகரச் செயலா் செல்லத்துரை, மாவட்ட மகளிரணிச் செயலா் முத்துலட்சுமி, இணைச் செயலா் மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT