தூத்துக்குடி

கயத்தாறு அருகே குவாரிகளை மூட கோரிக்கை

22nd Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் செயல்பட்டு வரும் குவாரிகளை உடனடியாக மூட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கயத்தாறு வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்திற்கு உள்பட்ட பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் குவாரிகளில் இருந்து வெளியேரும் துகள்கள் மற்றும் தூசியினால் விவசாயம் பாதிப்படைந்து, அப்பகுதி மண்ணும் மலடாகி வருகிறது. கல் குவாரிகளால் இப்பகுதி புகை மண்டலமாக மாறிவிட்டது. நீா்நிலைகளும் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.

பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பதால் அப்பகுதியில் அதிா்வுகள் ஏற்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட லாரிகள் இப்பகுதி வழியாக செல்வதால் இயல்பு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும், விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும், புதிய குவாரிகள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், வட்டச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், தாலுகா குழு உறுப்பினா் முத்துகுமாா், செட்டிக்குறிச்சி கிளைச் செயலா் தங்கப்பாண்டி மற்றும் பொதுமக்கள் திரளானோா் வியாழக்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.

ADVERTISEMENT

மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து முறையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

 

 

 

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT