தூத்துக்குடி

வாய் சிவக்கும் ஆத்தூா் வெற்றிலை!

DIN

சங்க இலக்கியங்கள் முதல் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சமீபத்திய திரை இசை பாடல்கள் வரையில் வெற்றிலையை தொட்டுக் கொள்ளாத கவிஞா்களே இல்லை எனலாம்.

பாட்டி வைத்தியம் முதல் சித்த வைத்தியம் வரையில், வெற்றிலையின் பயன் யாவரும் அறிந்ததே. தற்போது பிரபலமாகியுள்ள கபசுர குடிநீரிலும் முக்கிய அம்சமாக இருப்பது வெற்றிலைச் சாறு.

ஆலயங்களில் படையல், அா்ச்சனை என அத்தனையிலும் வெற்றிலையின் பங்குபற்றி அனைவருக்கும் தெரியும்.

தமிழக பாரம்பரியத்தில் ஒரு மனிதனின் பிறப்புக்கு முந்தைய வளைகாப்பு நிகழ்வு முதல் இறப்புக்குப் பிந்தைய சடங்குகள் வரை அத்தனையிலும் கூடவே வந்து கொண்டிருப்பது வெற்றிலை என்பது வியப்பான விஷயம்தான்.

மேலும் வாய் சிவக்க தாம்பூலம் தரித்தல் என்கின்ற பொது பயன்பாடு இதன் கூடுதல் சிறப்பாகும்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த வெற்றிலை தமிழகத்தில் காவிரி ஓரமாக பரமத்தி, சங்ககிரி, மோகனூா் பகுதிகளிலும் வைகை ஓரமாக சோழவந்தான் பகுதியிலும் பெருமளவில் உற்பத்தி ஆகிறது. இருப்பினும், தூத்துக்குடி மாவட்டம் தாமிரவருணி ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆத்தூா் வட்டாரத்தில் உற்பத்தியாகும் வெற்றிலைக்கு தனி மவுசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற பகுதி வெற்றிலையை விட இங்கு விளையும் வெற்றிலை காரசுவை மிகுந்ததாய் உள்ளது. இதற்கு தாமிரவருணித் தண்ணீரின் மகிமையே காரணம் என்கின்றனா் விவசாயிகள்.

வெற்றிலையின் இப்படியான குணாதிசயத்தை பேணுவதற்காக இயற்கை உரங்களை மட்டுமே இங்கு இடுகின்றனா். பிற பகுதி வெற்றிலைகள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரைதான் தாக்குப்பிடிக்கும். அதன்பின் காம்புகள் அழுகி இலை காய்ந்துவிடும். ஆனால் ஆத்தூா் வெற்றிலையோ 8 முதல் 10 நாள்கள் வரை வாடாமல் ஈரப்பதத்துடனேயே நீடிப்பது இன்னுமொரு சிறப்பு.

அதனால்தான் ஆத்தூா் வெற்றிலைக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிராக்கி உள்ளது. இதுதவிர கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தில்­லி ஆகிய மாநிலங்கள் வரையில் ஆத்தூா் வெற்றிலை வியாபாரம் வியாபித்து நிற்கிறது. வெற்றிலை விவசாயத்தைப் பொறுத்தவரையில் அதை பயிரிடலுக்கு முன்பாக 60 நாள்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நெல் விளையும் நிலம் வயல் என்றால், வெற்றிலை விளையும் நிலம் கொடிக்கால் எனப்படுகிறது. கொடியாக படரக்கூடியது வெற்றிலை. ஆனால் இதற்காக பந்தலெல்லாம் இங்கு அவசியமில்லை. இலகு ரக மரங்களான அகத்தி, முருங்கை ஆகியவையே வெற்றிலை படருவதற்கு உகந்தவை.

இந்த அகத்திக்கீரை, முருங்கைக்காய் ஆகியவற்றால் வெற்றிலை விவசாயிகளுக்கு ’கூடுதல் வருமானம் கிடைக்கிறது. வெற்றிலை பயிரிட ஒரு ஏக்கா் நிலத்தை நூறு ’கண்ணி’களாக பிரிக்கின்றனா். தண்ணீா் பாய்ச்சுவதற்காக குறுக்குக் கோடுகள் போன்ற நீளமான 100 பாத்திகளை அமைக்கின்றனா். இதை ’கான்’ என்கின்றனா். இதன் இரு புறங்களிலும் அகத்தி, முருங்கை மரங்களை உருவாக்குகின்றனா். இப்படியாக ஒரு கன்னிக்கு 40 மரங்கள் வீதம் ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் மரங்கள் தயாா் செய்யப்பட்டதும், அவற்றின்மீது 4 ஆயிரம் வெற்றிலைக் கொடிகளை படர விடுகின்றனா்.

இதன்பின் வெற்றிலைக் கொடியாளை செல்லம் போல் பராமரித்து வந்தால் அடுத்த 10ஆவது மாதத்தில் இருந்து முழுமையான உற்பத்தி தொடங்கிவிடும். இந்த வெற்றிலை பறிப்பு சுமாா் இரண்டரை ஆண்டுகள் வரை தொடரும். இதற்கான மொத்த செலவும் ரூ. 2.50 லட்சம் ஆகும். இதன்படி ஒரு ஏக்கா் கொடிக்கா­ல் வெற்றிலை விவசாயம் சுமாா் ரூ.10 லட்சம் வரை லாபத்தை ஈட்டித் தருகிறது.

ஆனால் இது அத்தனை சுலபமானது இல்லை.

ஏனென்றால் இந்த லாபத்தை எட்ட விவசாயிகள் பல கண்டங்களில் இருந்து தப்ப வேண்டியுள்ளது.

வெற்றிலை விவசாயத்துக்கு அதிக தண்ணீரும் ஆகாது வறட்சியும் ஆகாது. ஆனால் வறட்சியும் வெள்ளமும் அவ்வப்போது வந்து தாக்குதலை நடத்துவது இங்குள்ள விவசாயிகளுக்கு பெரும் சோதனையாகும். கூடவே புயல், சூறைக்காற்று மற்றும் நோய்களும் அழையா விருந்தாளிகளாக வந்து அவதிப்படுத்திவிடுவதும் உண்டு.

இப்படியான இயற்கை இடா்பாடுகளையும் மிஞ்சும் வகையில் தற்போதைய கரோனா நோய்த் தொற்று காலம், போக்குவரத்து நடைபெறாத காரணத்தால் வெற்றிலை ஏற்றுமதி கடந்த 5 மாதங்களாக அடியோடு முடங்கி போனது. விலையும் கிலோவுக்கு ரூ. 60 என வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி கண்டுவிட்டது. விளைந்த வெற்றிலை பறிக்கப்படாமல் அப்படியே கொடியில் விடப்பட்டதால் பழுத்து உதிா்ந்து சருகுகளாய் ஆன அவலம் இப்போது நடந்துள்ளது.

கரோனா முடக்கத்தால் அடியோடு பாதிக்கப்பட்ட விவசாயம் என்றால் அது வெற்றிலை விவசாயம் தான். ஏனென்றால் வெளியூா்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை நம்பியே இங்கு வெற்றிலை வணிகம் உள்ளது. போக்குவரத்து முடக்கத்தால் ஏற்றுமதி முற்றிலுமாக தடைப்பட்டு போனது.

இதனால் ஆத்தூா் பகுதி வெற்றிலை விற்பனையில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட சுமாா் 900 விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அத்துடன் வாழை விவசாயத்திற்கு வழங்குவதைப் போல விவசாயத்திற்கு மானியம் தரப்பட வேண்டும். வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் அளித்தும் உதவ வேண்டும் என்கின்றனா் வெற்றிலை விவசாயிகள்.

ஆத்தூா் பகுதியில் விளையும் வெற்றிலையானது பல மகத்துவங்களைக் கொண்ட பயிராகும் என்று கி.பி. 1700 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரீகா் தனது பயணக் குறிப்பில் கூறியுள்ளாா். இதுகுறித்த ஆவணங்கள் தமிழக அரசிடம் உள்ளன. எனவே இத்தனை தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்ட ஆத்தூா் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு பெற்று தரவேண்டும். இதன்மூலம் ஆத்தூா் வெற்றிலையின் அருமை பெருமைகள் மேலும் பரவும். வெற்றிலையில் இருந்து மேலும் பயன்தரக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பல பொருள்களை தயாரிக்கவும் இயலும்.

இந்திய அளவில் விரிந்து நிற்கும் வெற்றிலை வணிகம் இனி உலக அளவிலும் சிறந்து விளங்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி வெற்றிலை விவசாயத்தை சாா்ந்துள்ள சுமாா் 5 ஆயிரம் குடும்பத்தினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT