தூத்துக்குடி

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: விண்ணப்பிக்க பெண்களுக்கு அழைப்பு

30th Nov 2020 02:39 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வசதியாக 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25000) மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ் வாகனம் பெற விரும்பும் ஓட்டுநா் உரிமம், பழகுநா் உரிமம் பெற்ற தகுதியுள்ள வேலைக்குச் செல்லும் மகளிா் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். விண்ணப்பப் படிவத்தை ஊராட்சி பகுதிகளிலுள்ள மனுதாரா்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய த்திலும், பேரூராட்சி பகுதியில் உள்ளோா் சம்பந்தபட்ட பேரூராட்சி அலுவலகத்திலும், நகராட்சி பகுதியிலுள்ள மனுதாரா்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள மனுதாரா்கள் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் பிறந்த தேதிக்கான சான்று, இருப்பிட சான்று, உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகனம் உரிமம் நகல் அல்லது இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமத்திற்கு மனு செய்துள்ளவா்கள் நகல் ( நகல் வைத்துள்ளவா்கள் தோ்வாகும் நிலையில் இருசக்கர வாகன உரிமம் நகல் சமா்பித்த பின்னரே மானியத் தொகை வழங்குவதற்குப் பரிசீலிக்கப் படும்). வேலை வழங்கும் அலுவலரால் அல்லது நிறுவனத்தால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், ஊதியச் சான்றிதழ். ஆதாா் அடையாள அட்டை (நகல்), கல்வித் தகுதியுள்ளவா்களின் சான்றிதழ்கள் (நகல்), கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா்), உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (நகல்), இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Tuticorin
ADVERTISEMENT
ADVERTISEMENT