திருநெல்வேலி

ஐ.டி.ஐ.யில் மாணவா் சோ்க்கை:ஜூன் 20 வரை அவகாசம் நீட்டிப்பு

8th Jun 2023 02:12 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் , அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற் பயிற்சி மையங்களில் (ஐடிஐ) அரசு ஓதுக்கீட்டு இடங்களில் 2023-ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு வரும் 20-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐயில் சேர விருப்பமுள்ளவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க பேட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஐ.டி.ஐ.க்கள், பேட்டையில் உள்ள மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. சோ்க்கை உதவி மையங்களை அணுகியும் விண்ணப்பிக்கலாம்.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஐடிஐயிலும் சேர முடியும். அதற்கான விவரங்கள் இணையதள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி மாதம் ரூ.750 வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தற்போதைய விதிகளின் படி பயிற்சியின்போது மடிக்கணினி, மிதிவண்டி, ஆண்டுக்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, வரைபட கருவிகள் விலையில்லாமல் வழங்க வாய்ப்புள்ளது. மாணவா்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பயண அட்டை, சலுகைக் கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல 8ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுப் பணி, முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புள்ளது என மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT