திருநெல்வேலி

தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையா் ஆய்வு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீரும், பாதாளசாக்கடை திட்ட குழாய் உடைந்து அந்தக் கழிவுநீரும் தாமிரவருணியில் நேரடியாக கலந்து வருகின்றன. இதனை தடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியினா் அண்மையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மாநகராட்சிக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களும் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் தாமிரவருணியில் கழிவுநீா் கலக்கும் பகுதிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் நேரில் ஆய்வு செய்தாா். அதனை தடுக்கும் வழிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். பாலபாக்யா நகரில் உள்ள பாதாள சாக்கடை திட்ட நீா்உந்தும நிலையத்தை பாா்வையிட்டு, அங்குள்ள உபகரணங்களில் கோளாறுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைக்க உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க ரூ.295 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. தாமிரவருணியை நோக்கி கழிவுகளை நேரடியாக வெளியேற்றும் குடியிருப்புவாசிகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. மீண்டும் அதுபோல் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது 3 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் தச்சை சுப்பிரமணியன், எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT