திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் யானைக்கு மூட்டு வலி: மருந்தாக காலணி அணிவித்த பக்தர்கள்!

2nd Jul 2022 04:02 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானைக்கு மூட்டு வலிக்கு மருத்துவ குணம் வாய்ந்த ரூபாய் 12,000 மதிப்பிலான தோல் காலணியை செய்த பக்தர்கள் யானைக்கு அணிவித்தனர்.  

திருநெல்வேலி நகர்ப் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவியில் யானையின் பெயர் காந்திமதி. 13 வயதில் கோயிலுக்குள் வந்தது. இப்போது யானைக்கு 52 வயதாகிறது. கடந்த 2017-ம் ஆண்டு யானையை சோதனை செய்த மருத்துவ குழுவினர் வயதுக்கு ஏற்ற எடையை தாண்டி கூடுதலாக 300 கிலோ உள்ளது. எனவே யானையின் எடையை குறைக்க வேண்டும் என கூறினர்.

இதையும் படிக்க: கேதார்நாத் கோயிலின் கருவறைக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் யானையை நடைபயிற்சி அழைத்துச் செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை  குறைவாக கொடுப்பது,  நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம் கொடுப்பது எனத் தொடர் உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளால் யானை 6 மாதத்தில் 150 கிலோ எடை குறைந்தது. தற்போது சரியான எடையை அடைந்திருந்தாலும், வயது முதிர்வின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமப்படுகிறது. யானை காந்திமதிக்கு நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த ரூபாய் 12,000 மதிப்பிலான தோல் காலணியை செய்த பக்தர்கள் யானைக்கு அணிவித்தனர்.  

தமிழகத்திலேயே  நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் யானைக்குதான் முதல் முதலாக காலணி அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT