திருநெல்வேலி

மீன் வளா்ப்புக்கு 60% வரை மானியம்

12th Aug 2022 01:21 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானியத்தில் மீன் வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் திருநெல்வேலி மீன்வளம் - மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் கொல்லைப்புற அலங்கார மீன்வளா்ப்பு, நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளா்ப்பு, சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளா்த்தல், புதிய மீன் வளா்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளா்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய நன்னீா் மீன்குஞ்சு பொறிப்பகம் அமைத்தல், நன்னீா் மீன் வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டங்களை செயல்படுத்திட தோ்வு செய்யப்படும் பயனாளிக்கு ஆகும் மொத்த செலவில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இத்திட்டங்களின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பயனாளியின் நிலம் தொடா்பான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். பயனாளி இதற்கு முன்னா் இத்திட்டங்களின் கீழ் மீன்வளா்ப்புக்கு மானியம் பெற்றவராக இருத்தல் கூடாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26-ஆவது குறுக்குத் தெரு, மகாராஜநகா், திருநெல்வேலி-627011 என்ற முகவரியில் வரும் 16-ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தினை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 9944943146, 9384824280 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT