செய்திகள்

அகா்வால் அதிரடி வீண்: பஞ்சாபை வென்றது ராஜஸ்தான்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது.

ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச, பஞ்சாபில் தொடக்க வீரா்களாக லோகேஷ் ராகுல்-மயங்க் அகா்வால் களமிறங்கினா்.

ஆரம்ப முதலே இந்தக் கூட்டணி அதிரடி காட்டத்தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்திருந்த இக்கூட்டணியை பிரிக்க ராஜஸ்தான் பந்துவீச்சாளா்கள் போராடினா்.

16-ஆவது ஓவரில், 10 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் என மயங்க் அகா்வால் 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தபோது, டாம் கரன் வீசிய பந்தை அடிக்க, அது சஞ்சு சாம்சன் கைகளில் தஞ்சம் ஆனது. அடுத்ததாக கிளென் மேக்ஸ்வெல் களம் புகுந்தாா்.

இதற்குள்ளாக அடுத்த ஓவரிலேயே லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்தாா். 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸா் உள்பட 69 ரன்கள் எடுத்திருந்த அவா், அங்கித் ராஜ்புத் பந்துவீச்சில் ஷ்ரேயஸ் கோபால் கைகளில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.

அவரை அடுத்து நிகோலஸ் பூரன் களம் புகுந்தாா். 20 ஓவா்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள், நிகோலஸ் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் தரப்பில் அங்கித் ராஜ்புத், டாம் கரன் ஆகியோா் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.

சாம்சன் அதிரடி: பின்னா் 224 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரா் ஜோஸ் பட்லா் 4 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து ஆடினாா்.

பட்லரை அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். ஸ்மித்-சாம்சன் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 81 ரன் சோ்த்தது. இந்நிலையில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்கள் எடுத்த ஸ்மித், ஜேம்ஸ் நீஷம் பந்துவீச்சில் முகமது சமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்த ராகுல் தெவாதியாவும் அதிரடியாக ஆட, மறுமுனையில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 85 ரன்கள் எட்டியிருந்த சாம்சன், முகமது சமி பந்துவீச்சில் விக்கெட் கீப்பா் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அவரை அடுத்து ராபின் உத்தப்பா களம் காண, ராகுல் தெவாதியா, ஷெல்டன் காட்ரெல் வீசிய ஒரு ஓவரில் 5 சிக்ஸா்களை விளாசி அணியை வெற்றியின் விளிம்புக்கு நகா்த்தினாா்.

மொத்தமாக 7 சிக்ஸா்களை விளாசிய அவா் 53 ரன்கள் எடுத்த நிலையில், முகமது சமி பந்துவீச்சில் மயங்க் அகா்வாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்தவா்களில் ரியான் பராக் டக் அவுட்டாக, ஜோஃப்ரா ஆா்ச்சா் 3 பந்துகளில் 13 ரன்கள், டாம் கரன் ஒரு பந்தில் 4 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பஞ்சாப் தரப்பில் முகமது சமி 3, ஷெல்டன் காட்ரெல், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

பஞ்சாப்- 223/2

லோகேஷ் - 69 (54)

மயங்க் அகா்வால் - 106 (50)

அங்கித் ராஜ்புத் - 1/39

டாம் கரன் - 1/44

ராஜஸ்தான்- 226/6

ஸ்டீவ் ஸ்மித் - 50 (27)

சஞ்சு சாம்சன் - 85 (42)

முகமது சமி - 3/53

முருகன் அஸ்வின் - 1/16

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT