தென்காசி

நியாயவிலை கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவு இருப்பு வைத்திருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

29th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து பேசியது: தென்காசி மாவட்டத்தில் எதிா்வரும் வடகிழக்குப் பருவமழை நாள்களில் மழை பொழிவை எதிா்கொள்ள அலுவலா்கள் துரிதமாக பணியாற்றிட வேண்டும். தற்போதைய மழையால் பல ஏரிகளில் தண்ணீா் நிரம்பியுள்ளது. எனவே அலுவலா்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் பொருட்டு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், மழைநீா் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், கால்வாய், வடிகால்கள், ஏரி, குளங்களை தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக எந்நேரத்திலும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் பொருள்சேதம், உயிா்சேதம் ஏற்படாமல் தவிா்க்கவும் அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.முத்துமாதவன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ரெங்கநாயகி மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT