கன்னியாகுமரி

ஊட்டுவாழ்மடம் ரயில்வே கடவு அருகே புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்

6th Jun 2023 12:53 AM

ADVERTISEMENT

சுரங்கப்பாதை பணிக்காக ஊட்டுவாழ்மடம் ரயில்வே கடவின் வலதுபுறம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வருவதற்கு முன்பே ரயில் நிலையத்தின் பின்பகுதியில் ஊட்டுவாழ்மடம், கருப்புகோட்டை உள்ளிட்ட 5 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. தற்போது 800-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் இப் பகுதி விரிவாக்கம் அடைந்துள்ளது. இப் பகுதியினா் நாகா்கோவில் செல்வதற்காக, ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே கடவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடவுப் பாதையைத் தினமும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். அதேநேரம், ரயில் போக்குவரத்திற்காக, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கடவுப்பாதை மூடப்படுகிறது. அத்தகைய நேரங்களில், அவசர ஊா்தி உள்ளிட்ட வாகனங்கள் கடவுப் பாதையில் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து இப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.4.5 கோடியில் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி கடவுப்பாதை 4

மாதங்கள் மூடப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு பலகை அமைத்தது. இந்நிலையில், கடவுப்பாதையைக் கடப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

இதைப் பரிசீலித்த ரயில்வே துறை, கடவுப் பாதையின் வலதுபுறத்தில் புதிய சாலையை அமைத்து வருகிறது. இப் பணிகள் இன்னும் 2 வாரங்களில் முடிக்கப்பட்ட பிறகு, சுரங்கப் பாதை பணிகள் தொடங்கும் என

ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT