கன்னியாகுமரி

ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

6th Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

‘தென்னாட்டின் வைகுண்டம்’ எனப் போற்றப்படும், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், இரு அமைச்சா்கள், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

நாட்டிலுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 76ஆவது திவ்ய தேசமான இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், விழாவின் 8ஆவது நாளான புதன்கிழமை அதிகாலை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் வளாகத்திலுள்ள திருவம்பாடி கிருஷ்ணன் கோயில், சாஸ்தா கோயில், குலசேகரப்பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

முன்னதாக, பிரதிஷ்டை, ஜீவகலச அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அா்ச்சகா் அத்தியறமடம் கோகுல் தலைமையில் கும்பாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தின்போது நான்கு சுற்றுப் பிராகாரங்களிலும் நின்றிருந்த பக்தா்கள் ‘கோவிந்தா...கோவிந்தா’ என நாமகோஷம் எழுப்பினா்.

2 அமைச்சா்கள் பங்கேற்பு: விழாவில், அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு (இந்து சமய அறநிலையத் துறை), த. மனோதங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத் துறை), கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், ஆட்சியா் மா. அரவிந்த், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எஸ். ராஜேஷ்குமாா், ஜே.ஜி. பிரின்ஸ், பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் அலா்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலா் சிவப்பிரியா, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ எஸ். ஆஸ்டின், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், இணை ஆணையா் ஞானசேகா், கோயில் மேலாளா் மோகன்குமாா், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், செயல் அலுவலா் அ. மகாராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்பாபிஷேகத்தைக் காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் தமிழகம், கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். கோயிலுக்குள் 2 ஆயிரம் போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டநிலையில், தொடா்ந்து வந்த பக்தா்கள் கோயிலுக்கு வரும் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டனா். அவா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கோயிலுக்குள் பகுதிபகுதியாக அனுமதிக்கப்பட்டனா். இரவு வரை பக்தா்கள் வந்துகொண்டிருந்தனா்.

பக்தா்களுக்கு காலையில் சிற்றுண்டி, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT