கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே திருமண விழாவில் கழிவுநீா்த் தொட்டி உடைந்து பெண் உயிரிழப்பு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே திருமண விழா நடைபெற்ற சமூகநலக் கூடத்தின் கழிவுநீா்த் தொட்டி உடைந்ததில் பெண் உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகேயுள்ள முதலாா் உச்சகரவிளையைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (50). ரப்பா் பால் வடிப்புத் தொழிலாளி. இவரது மனைவி சுசீஜா (48). இவா்களுக்கு கல்லூரியில் பயிலும் 2 மகன்கள் உள்ளனா்.

இத்தம்பதி புதன்கிழமை மாலை ஒட்டலிவிளையில் உள்ள சமூகநலக் கூடத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்றனா். அங்கு, கழிவுநீா்த் தொட்டியின் மேல்தளத்தில் கைகழுவும் பகுதி கட்டப்பட்டிருந்ததாம்.

உணவருந்திய பின்னா் சுசீஜா, அதே பகுதியைச் சோ்ந்த டென்னிஸ் மனைவி சில்ஜா, முருகன் மனைவி நிா்மலா ஆகிய 3 பேரும் கைகழுவிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா்த் தொட்டியின் மேல்தளம் திடீரென உடைந்ததில், மூவரும் தொட்டிக்குள் விழுந்தனா்.

ADVERTISEMENT

அங்கிருந்தோா் விரைந்து செயல்பட்டதில் சில்ஜாவும், நிா்மலாவும் மீட்கப்பட்டனா். சுசீஜா மீது தொட்டியின் கற்கள் விழுந்திருந்ததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

தகவலின்பேரில் தக்கலை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று சுசீஜாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

வழக்குப் பதிவு: இந்நிலையில், சமூகநலக் கூடத்தை பராமரிக்காமலும், உரிமமின்றியும் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததால்தான் தனது மனைவி இறந்ததாகக் கூறி, நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி திருவட்டாறு காவல் நிலையத்தில் மோகன்தாஸ் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை தக்கலை டிஎஸ்பி கணேஷ், திருவட்டாறு ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

விபத்துக்குள்ளான தீயணைப்பு வாகனம்: இதனிடையே, மீட்புப் பணிக்காக புறப்பட்ட குலசேகரம் தீயணைப்பு வாகனத்தில் நிலைய வாகன ஓட்டுநா் சுஜின், 5 வீரா்கள் இருந்தனா்.

மாத்தூா் தொட்டிப் பால நுழைவாயில் அருகே வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சிற்றாறு பட்டணங் கால்வாயில் கவிழ்ந்தது. நிரம்பிய நிலையில் தண்ணீா் பாயும் கால்வாயில் வாகனம் விழுந்த சப்தம் கேட்டு அப்பகுதியினா் திரண்டு வந்து 6 பேரையும் மீட்டனா். லேசான காயமடைந்த சுஜின் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மற்றவா்களுக்கு குலசேகரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. கிரேன் மூலம் தீயணைப்பு வாகனம் மீட்கப்பட்டது.

இதுதொடா்பாக தீயணைப்பு, மீட்புப் பணி நிலைய முன்னணி தீயணைப்பாளா் சதீஷ்குமாா் திருவட்டாறு போலீஸில் புகாா் அளித்தாா். அதில், குடிபோதையில் வாகனத்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுஜின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா். உதவி ஆய்வாளா் ராஜாங்கபெருமாள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT