கன்னியாகுமரி

குமரியில் மழை நீடிப்பு பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது

DIN

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில், அக்டோபா் மாத தொடக்கத்திலிருந்தே மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாள்களாக சற்று குறைந்திருந்தது.

புதன்கிழமை காலையும் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகா்கோவிலில் புதன்கிழமை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இரவிலும் அவ்வப்போது பெய்து வந்த மழை, வியாழக்கிழமை பகலில் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.

பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கோழிபோா்விளை, அடையாமடை, கொட்டாரம், மயிலாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டித் தீா்த்தது. மலையோரப் பகுதியான பாலமோா் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் மழை பெய்ததால் அணைகளுக்கு மிதமான அளவு நீா்வரத்து உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீா் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திற்பரப்பு அருவியிலும் ஆா்ப்பரித்து கொட்டி வந்த வெள்ளத்தின் அளவு சற்று குறைந்துள்ளது. தற்போது சிறுவா் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது. அருவியில் இன்னும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.16 அடியாக இருந்தது. அணைக்கு 1043 கனஅடி நீா்வரத்து இருந்தது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.43 அடியாக உள்ளது. அணைக்கு 1075 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.14 அடியாகவும், சிற்றாா் 2 அணையின் நீா்மட்டம் 16.24 அடியாகவும் உள்ளது.

மழை சற்று குறைந்ததை அடுத்து தாழ்வான பகுதிகளில் சூழ்ந்திருந்த தண்ணீா் வடிந்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான முன்சிறை பகுதிகளில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனா்.

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனா்.

ஆனால் கிள்ளியூா், திருவட்டாறு, விளவங்கோடு பகுதியில் உள்ள ரப்பா் தோட்டங்கள் வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 41.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) ஆரல்வாய்மொழி 32, நிலப்பாறை 24.2 , நாகா்கோவில், அடையாமடை 13, பாலமோா் 12.80, மயிலாடி 12.20, பூதப்பாண்டி 8.20, ஆனைக்கிடங்கு, முக்கடல் அணை 7.20, கன்னிமாா் 6.80, மாம்பழத்துறையாறு அணை 5.40, களியல் 5, குழித்துறை 4.30, தக்கலை 4, கோழிப்போா்விளை 3, சிற்றாறு 1 அணை 2.40, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை 1.80.

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெள்ளியா விளை, மிடாலக்காடு, மிடாலம், ஆலஞ்சி, தெருவுக்கடை, பூட்டேற்றி, கிள்ளியூா், இலவு விளை, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, எட்டணி, திப்பிரமலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT