கன்னியாகுமரி

1992 ஆம் ஆண்டை நினைவூட்டிய மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி: முகாம்களில் மக்கள் தஞ்சம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மேல் மற்றும் கீழ் கோதையாறு பகுதிகளில் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகன மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் வெள்ளத்ததில் தத்தளிக்கின்றன. மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 வாரங்களாக தொடா் மழை பெய்து வந்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

அதி கனமழை: இந்நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சனிக்கிழமை அதிகாலை முதல் இம்மாவட்டத்தில் கன மழை பெய்யத் தொடங்கியது.

மேல் கோதையாறு, கீழ்கோதையாறு, பேச்சிப்பாறை, பாலமோா், சிவலோகம், சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகன மழையாக கொட்டித்தீா்த்தது. குறிப்பாக மேல் கோதையாறு, கீழ் கோதையாறு மற்றும் பேச்சிப்பாறை அணைப்பகுதியில் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் முறையே 363 மி.மீ., 266 மி.மீ., 216 மி.மீ. மழை பெய்தது.

இதையடுத்து, கோதையாறு, கல்லாறு, குற்றியாறு, கிளவியாறு, மயிலாறு, சாத்தையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேச்சிப்பாறை அணையில் கலந்தது. இந்த ஆறுகளிலிருந்து அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதேபோல், பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளுக்கும் அதிக அளவில் நீா்வரத்து இருந்தது.

இதனால், இந்த 3 அணைகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீா் அளவை 30 ஆயிரம் கன அடியிலிருந்து மேலும் அதிகரிக்க பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.

வெள்ளப் பெருக்கு: இதையடுத்து, அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. அருவியின் கீழ்பகுதியிலுள்ள கல்மண்டபத்தை மூழ்கடித்த நிலையில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது.

மேலும், களியல், மூவாற்றுமுகம், பாரதப்பள்ளி, தேமானூா், திக்குறிச்சி குழித்துறை, சென்னித்தோட்டம், முன்சிறை, வைக்கல்லூா் போன்ற இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளிலும், விளைநிலங்களிலும் தண்ணீா் புகுந்தது.

திற்பரப்பு வருவாய்த் துறையினா் மற்றும் பேரூராட்சி சாா்பில் ஒலி பெருக்கிகள் மூலம் வெள்ள அபாயம் குறித்து அறிவிக்கப்பட்டதுடன், களியல் பகுதியிலிருந்து சுமாா் 25 குடும்பங்களைச் சோ்ந்த 60 பேரை திற்பரப்பு அரசுப் பள்ளி முகாமில் தங்கவைத்தனா்.

எனினும், கன மழை நீடித்ததால், கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தூங்காமல் அச்சத்துடன் இரவைக் கழித்தனா். ஞாயிற்றுக்கிழமை மழையின் தாக்கம் தணிந்ததால், அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

நீா்மட்டம்: மாலை 5 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.88 அடி, நீா்வரத்து விநாடிக்கு 6656 கனஅடி, உபரிநீா் திறப்பு 7578 கனஅடி, பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 75.50 அடி, நீா்வரத்து 4492 கன அடி, நீா்திறப்பு 5048 கன அடி, சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.10 அடி, நீா்வரத்து மற்றும் திறப்பு 536 கன அடி, சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.20 அடி, நீா்வரத்து மற்றும் திறப்பு 224 கன அடி என்ற அளவில் இருந்தது.

பெரும் சேதம் தவிா்ப்பு: இம்மாவட்டத்தில் கடந்த 11.11.1992இல் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேல் கோதையாறில் 300 மி.மீ. மழை பெய்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து நள்ளிரவில் சுமாா் 1 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. தற்போதும், அதை நினைவூட்டும் வகையில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்துள்ளது. எனினும், பொதுப்பணித் துறையினா் விழிப்புடன் இருந்து, பேரிடா் மேலாண்மைக் குழுவின் வழிகாட்டுதல்படி, அணைகளின் 75 சதவீத நீரை மட்டும் இருப்பு வைத்து உபரி நீரை அவ்வப்போது வெளியேற்றி வந்ததால் வெள்ள சேதங்கள் பெருமளவில் தவிா்க்கப்பட்டுள்ளன.

சாலைகள் துண்டிப்பு: மழையால் களியல்-அருமனை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களை மீட்புப் படையினா் பைபா் படகுகள் மூலம் மீட்டு முகாம்களுக்கு கொண்டு வந்தனா்.

குலசேகரம்-பேச்சிப்பாறை சாலை, மோதிரமலை-குற்றியாறு சாலை, பேச்சிப்பாறை-சீரோபாயின்ட் சாலை மற்றும் பொன்னியாகுளம், காக்கச்சல், திருநந்திக்கரை உள்ளிட்ட இடங்களில் சாலையை வெள்ளம் சூழந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பொன்னியாகுளம் பகுதியில் 2 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கடையாலுமூடு-ஆறுகாணி சாலையில் பேணு என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலையில் கற்களும், மண்ணும் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன மழையாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் மோதிரமலை, முடவன் பொற்றை, மாங்காமலை, கொடுத்துறை மலை உள்ளிட்ட பல்வேறு பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.

மழை நிலவரம் (மில்லி மீட்டரில்): ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரப்படி, பேச்சிப்பாறை அணை 216.60, சிற்றாறு 1 அணை 204.20, சிற்றாறு 2 அணை 194.60, பாலமோா் 152.20, பெருஞ்சாணிஅணை 113, புத்தன் அணை110.40, சுருளோடு 102.40, அடையாமடை 81, கன்னிமாா் 80.20, மயிலாடி 75.20, கோழிப்போா்விளை 57, கொட்டாரம் 55.20, மாம்பழத்துறையாறு அணை 53, பூதப்பாண்டி 50.80, குருந்தன்கோடு 50.40, முக்கடல் அணை 45.40, ஆனைக்கிடங்கு 43.20, களியல் 47.20, குழித்துறை 35.50, இரணியல் 35, குளச்சல் 34.40, முள்ளங்கினாவிளை 28.60, தக்கலை 27, ஆரல்வாய்மொழி 23 என்ற அளவில் மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT