கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: அணைகளின் நீா்மட்டம் உயா்வு; அருவியில் வெள்ளம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் மழை

தொடங்கிய போதிலும், கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவானதால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய மழை திங்கள்கிழமை பகலிலும் நீடித்தது. நாகா்கோவில், வெட்டூா்ணிமடம், செட்டிகுளம் சந்திப்பு, மீனாட்சிபுரம், சுசீந்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வடசேரி, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டாறு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இரணியல், மாா்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், புகா் பகுதிகளிலும்

கனமழை பெய்தது. ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவி பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலையோரப்பகுதியான பாலமோா் பகுதியிலும் கனமழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 31.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1271 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து 530 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 67.30 அடியாக உள்ளது.

இம்மாவட்டத்தில் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாசனக் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

பூதப்பாண்டி, தக்கலை, ஈத்தன்காடு பகுதிகளில் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. குலசேகரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதிகளில் ரப்பா் பால்வடிப்பு தொழில் முடங்கியுள்ளது. தோவாளை, செண்பகராமன்புதூா் பகுதிகளில் செங்கல் சூளை, கட்டுமானத் தொழில், சலவைத் தொழில், நடைபாதை வணிகம், உப்பளத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாலமோா் பகுதியில் அதிகபட்சமாக 46.60, சிற்றாறு 2 அணை 40, கொட்டாரம் 37.60,சிற்றாறு 1 அணை 28, பேச்சிப்பாறை அணை 26.40, இரணியல் 22, கன்னிமாா் 16.80, பூதப்பாண்டி 15.80, அடையாமடை 15, குளச்சல் 12.80, தக்கலை 9.40, நாகா்கோவில் 8.60, களியல் 8.40, மயிலாடி 8.20, சுருளோடு 8.20, குருந்தன்கோடு 7.60, முக்கடல் அணை 7.40, பெருஞ்சாணிஅணை 6.80, புத்தன் அணை 6.40, மாம்பழத்துறையாறு அணை 6, முள்ளங்கினாவிளை 6 , குழித்துறை 5.40.

பெருஞ்சாணி அணை மூடல்: தொடா் மழையால் முக்கிய அணையான பெருஞ்சாணி அணை மூடப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் சற்று தணிந்த காரணத்தால் சனிக்கிழமை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா்வரத்து 1,000 கனஅடியாக அதிகரித்ததால் திங்கள்கிழமை மாலையில் அணை மூடப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் திறக்கப்படும் நீரின் 150 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனிடையே, திங்கள்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழை தீவிரமடைந்துள்ளதால் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய எச்சரிக்கை அளவான 72 அடியை விரைவில் எட்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT