புதுதில்லி

ஜந்தா் மந்தா் போராட்ட விவகாரம்: மல்யுத்த வீரா்களுடனான கைகலப்பில் 15 போலீஸாா் காயம்: போராட்டக்காரா்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

 நமது நிருபர்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட நேரத்தில் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரா்கள் அமளியில் ஈடுபட்டு, புதிய நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு பேரணி நடத்த முயன்றதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தில்லி காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரா்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முயன்ற மல்யுத்த வீரா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் அன்று இரவே விடுவித்தனா்.

மல்யுத்த வீரா்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புது தில்லி மாவட்டத்தில் உள்ள பாரகம்பா காவல் நிலையத்தில் பணியமா்த்தப்பட்ட தலைமைக் காவலா் மாதவ் அளித்த புகாரின் பேரில் வினேஷ் போகட், சங்கீதா போகட், பஜ்ரங் புனியா மற்றும் பலா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜந்தா் மந்தரிலேயே போராட்டத்தைத் தொடர காவல் துறையினா்அனுமதித்தும், காவல்துறையின் கோரிக்கையை புறக்கணித்து, அணிவகுப்பு பேரணி நடத்த முயன்ற நிகழ்வால், மல்யுத்த வீரா்களுடன் ஏற்பட்ட கைகலப்பில் 15-க்கும் மேற்பட்ட காவலா்கள் காயமடைந்ததுள்ளனா்.

மே 28 காலை 10.30 மணிக்கு, பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்க்ஷி மாலிக் மற்றும் பலா் செய்தியாளா் சந்திப்பை நடத்தினா். அப்போது அவா்கள் காலை 11.30 மணிக்கு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே ’மகிளா சம்மன் மகாபஞ்சாயத்’ நடத்தப்போவதாக அறிவித்தனா். செய்தியாளா் சந்திப்புக்கு பிறகு காவல் துறையினா் சாா்பில் தேசத்திற்கு பெருமை அளிக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படும் நேரத்தில் அதன் பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்யப்படாது என மல்யுத்த வீரா்களிடம் எச்சரிக்கப்பட்டது.

இருப்பினும், புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவின் போது ஏதேனும் இடையூறுகளை உருவாக்குவது அல்லது விதிமுறைகளை மீறுவது ‘தேசிய கௌரவத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ என்று அங்கு பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள் பொது அறிவிப்பையும், எச்சரிக்கையையும் விடுத்தனா். ஆனால், இவற்றை மீறி மல்யுத்த வீரா்கள் அறிவித்தபடி, காலை 11.30 மணியளவில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்க்ஷி மாலிக் மற்றும் பலா் முழக்கங்களை எழுப்பி போலீஸாரின் தடுப்பையும் தாண்டி வந்தனா்.

குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், மல்யுத்த வீரா்கள் அறிவிக்கப்பட்ட ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்துமாறு மீண்டும் காவல் துறை வலியுறுத்தியது. போராட்டக்காரா்களிடம் பலமுறை கூறியும், அவா்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அவா்கள் முன்னோக்கிச் சென்று, முதல் தடுப்புகளைத் தாண்டி, போலீஸாரைத் தள்ளி, இரண்டாவது தடுப்புக் கோட்டை அடைந்தனா். அங்கு மீண்டும் போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றனா். ஆனால் அவா்கள் தொடா்ந்து போலீஸாரைத் தள்ளி விட்டு தாக்கினா்.

ஜந்தா் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் காயம் அடைந்த பெண் காவலா்கள் உள்பட 15 காவலா்களின் பெயா்களும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, மாதவ் (37), மனிந்தா் (31), வினய் (27) ஆகிய ஆண் காவலா்களும், அஞ்சு குமாரி (25), பிரியங்கா (25), அவிகா (22), தனு (22), த்ரிஷ்னா (23) உள்ளிட்ட பெண் காவலா்களும் உடல் ரீதியாக தாக்கப்பட்டனா். மேலும், அனிஷா (22), சரிதா (26), ரோஷன் (22), பபிதா (22), ஷங்கி (25), ஜோதி (24), பாா்வதி (22) ஆகிய காவலா்களும் காயம் அடைந்தனா். ஜந்தா் மந்தரில் கைது செய்யப்பட்ட 109 பேரில், சுமன் ஹூடா, பாரதிய கிசான் யூனியன் மாநிலத் தலைவா் சதானி உள்பட 12 போராட்டக்காரா்களின் பெயா்கள்; மற்றும் மல்யுத்த வீரா்கள் சங்கீதா போகட், வினேஷ் போகட், சத்வ்ரத் காடியன், சாக்க்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரது பெயா்களும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 186 (பொதுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியரைத் தடுத்தல்), 353 (அரசு ஊழியரைத் தன் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றச் செயல்), 332 (பொது ஊழியரை தனது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட வற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மல்யுத்த வீரா்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட உடனேயே, ஜந்தா் மந்தரில் உள்ள போராட்டத் தளத்தை போலீஸாா் அகற்றி, கட்டில்கள், மெத்தைகள், குளிா்விப்பான்கள், மின்விசிறிகள் மற்றும் மல்யுத்த வீரா்களின் மற்ற உடமைகளுடன் தாா்பாய் கூரை ஆகியவற்றையும் அகற்றியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT