புதுதில்லி

தில்லியில் மேலும் 42 வணிக நீதிமன்றங்கள் அமைக்க கோரும் மனுவுக்கு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

 நமது நிருபர்

வணிக வழக்குகளை விரைவாக தீா்ப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தில்லியில் மேலும் 42 வணிக நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது தில்லி அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான வழக்குரைஞா் அமிக் சஹ்னி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் தலைமைப் பதிவாளா் மூலம் உயா்நீதிமன்றத்திற்கும் நோட்டீஸ் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக வழக்குரைஞா் அமித் சஹ்னி தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்திருப்பதாவது: வணிக நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக தில்லி அமைச்சரவை 2021-ஆம் ஆண்டு மாா்ச் 22-ஆம் தேதி எடுத்த முடிவைத் தொடா்ந்து அதே ஆண்டில் ஏப்ரல் 13-ஆம் தேதி தில்லி அரசால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனால், தில்லியில் மேலும் 42 வணிக நீதிமன்றங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சட்ட அமைப்புமுறை திறன் மற்றும் வா்த்தக வழக்குகளை தீா்ப்பதற்காக எடுக்கப்படும் நேரம் ஆகியவை தேசத்தின் சமூக மேம்பாடு, ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் முதலீடு வளா்ச்சி ஆகியவற்றில் முடிவு செய்வதில் முக்கிய காரணிகளாக உள்ளன. நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்கள் அவ்வப்போது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உத்தரவுகளும் வெளியிடப்படுகின்றன. குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட வணிக தாவாக்களில் நீதி வழங்கும் முறையை விரைவுப்படுத்தும் வகையில் உயா்நீதிமன்றங்களின் வணிக நீதிமன்றங்கள், வணிக டிவிஷன் மற்றும் உயா்நீதிமன்றங்களின் வணிக மேல்முறையீட்டு டிவிஷன் சட்டம் (2015) நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது வணிக தாவாக்கள் தொடா்புடைய கோரல்கள் மற்றும் வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவில் அரசுகள் மூலம் வணிக நீதிமன்றங்கள் தனியாக அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது.

தற்போது தில்லியில் 22 வணிக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 42 கூடுதல் நீதிமன்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தில்லி அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட நிலையில் நியமிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் இந்த நீதிமன்றத்தை முன்னதாக அணுகி இருந்தாா். அப்போது 2012, ஜூலை 5-ஆம் தேதியிட்ட நீதிமன்ற உத்தரவில், எதிா்மனுதாரா்களில் ஒருவரான உயா்நீதிமன்றத்தின் நிா்வாகப் பிரிவு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்தது.

அந்த அறிக்கையில் அனைத்து கூடுதல் நீதிமன்றங்களும் ஆறு மாதங்களுக்குள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த நீதிமன்றங்கள் தற்போது வரை செயல்படவில்லை. ஆகவே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வா்த்தக தாவாக்களை முடிப்பதற்காக 164 நாள்கள் கால அவகாசம் உலகளவில் எடுத்துக் கொள்ளப்படுவது நடைமுறையாக உள்ளது. ஆனால், தில்லியில் இது போன்ற ஒரு வா்த்தக தாவாவை முடிவு செய்ய 747 நாள்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மும்பையில் சராசரியாக 182 நாள்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. தில்லி நீதிமன்றங்கள் அதிக பணிச்சுமையில் உள்ளன. தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அலுவல்பூா்வ இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி நிலவரப்படி தில்லியில் 22 வணிக நீதிமன்றங்களில் 29 ஆயிரத்து 959 வழக்குகள் நிலுவையில் உள்ளன என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT