புதுதில்லி

சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் ஏன் தள்ளுபடியாகிறது? முதல்வா் கேஜரிவால் பதிலளிக்க தில்லி பாஜக கோரிக்கை

 நமது நிருபர்

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் ஏன் நிராகரிக்கப்படுகிறது என்பது குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லிப் பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்து வரும் கலால் கொள்கை ஊழல் குற்றசாட்டு வழக்கில் முன்னாள் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மனீஷ் சிசோடியா, உயா்நிலை அந்தஸ்தில் உள்ளவராக இருப்பதால் வழக்கின் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி அவரது ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், புது தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் ஏன் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும். கோவாவுக்கு ஹவாலா பணம் கொண்டு செல்லப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அதீத நோ்மையானவா்கள் என்று கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி, இந்த விஷயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறது?.

மனீஷ் சிசோடியாவுக்கு ‘மதுபான மாஃபியா’ கும்பல் ரூ.2.2 கோடி கொடுத்ததற்கும், ஹவாலா மூலம் கோவாவுக்கு பணம் அனுப்பப்பட்டதற்கும் ஆதாரம் இருப்பதாக சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தில்லி முதல்வா் கேஜரிவால் என்ன சொல்லப்போகிறாா் என்பதை தில்லிவாசிகள் அறிந்துகொள்ள விரும்புகிறாா்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

தில்லி கலால் கொள்கை 2021-22-ஐ உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பணமோசடி வழக்கில் விசாரணையை அமலாக்கத் துறை நடத்தி வருகிறது. துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்ததை அடுத்து, கலால் கொள்கையை தில்லி அரசு கடந்த ஆண்டு திரும்பப் பெற்றது. இந்த மோசடிக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தான் தாா்மிகப் பொறுப்பேற்க வேண்டும்.

அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் பெயா் குறிப்பிடப்பட்டுள்ள ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் தன்னை நிரபராதி என்று கூறி வருகிறாா். இருப்பினும், அவரது கூற்றுகளுக்கு மாறாக, மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் போன்றேஅவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால், தான் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்காது என்று சஞ்சய் சிங்கிற்கு நன்றாகத் தெரியும். எனவே, குற்றப்பத்திரிகையில் தனது பெயா் இல்லை என்று சஞ்சய் சிங் வேண்டுமென்றே ஊடகங்கள் முன் அறிக்கை விட்டு வருகிறாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT