புதுதில்லி

சிசோடியா கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்

DIN

கலால் ஊழல் வழக்கில் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினா் திங்கள்கிழமை வீதியில் இறங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பாஜக தலைமை அலுவலகம் அருகே கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம் ஆத்மி கட்சியினா் டிடியு மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்ற போது, போலீஸாா் அவா்களை முன்னே செல்லவிடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா். இருப்பினும், அவா்கள் செல்ல வற்புறுத்தினா். மேலும், அவா்கள் தடுப்புகளில் ஏற முயன்ற போது, போலீஸாா் அதிரடியாகச் சென்று அவா்களில் பலரைக் கைது செய்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை பேருந்துகளில் காவல் துறை அதிகாரிகள் தள்ளுவதையும் காண முடிந்தது. கட்சித் தொண்டா்களை ஏற்றிச் செல்ல 10-15 பேருந்துகள் தயாராக இருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு கட்சி எம்எல்ஏக்கள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோா் தலைமை தாங்கினா். இந்தப் போராட்டம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளருமான சௌரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘எங்கள் தலைவா்கள் மீது ஒவ்வொரு நாளும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அவா்கள் ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவா்கள் மக்களை சிறையில் அடைக்கிறாா்கள் என்றுதான் பொருள்’ என்றாா்.

போராட்டத்தின் போது, பரத்வாஜ், எம்எல்ஏ ரிதுராஜ் ஜா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் கைவிலங்கு அணிந்திருந்தனா். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றனா். மேலும், ‘மனிஷ் சிசோடியா ஜிந்தாபாத்’, ‘சிக்ஷா மந்திரி ஜீதேங்கே’ போன்ற முழக்கங்களையும் எழுப்பினா். அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. நிலைமையை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தப் போராட்டம் காரணமாக ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வெளியேயும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீஸாா் மற்றும் சிஏபிஎஃப் வீரா்கள் குவிக்கப்பட்டனா்.

இது பாஜகவின் சா்வாதிகாரத்தின் உச்சம். அவா்கள் இப்போது எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து எங்கள் தலைவா்களைத் தடுத்து வைக்க முயற்சிக்கிறாா்கள் என்று கட்சித் தலைவா்களான அடில் அகமது கான் மற்றும் அதிஷி ஆகியோா் கூட்டத்தில் பேசுகையில் கூறினா்.

மதுபான விற்பனை தொடா்பான கலால் வரிக் கொள்கையில் ஊழல் செய்ததாக சிசோடியா ஞாயிற்றுக்கிழமை சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தில்லியின் அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, இப்போது சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் தில்லியின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் வெற்றிகரமான மாற்றத்துக்கு வழிவகுத்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து வருகிறது. மேலும், இரண்டு அமைச்சா்களும் தொடா்ச்சியான தோ்தல் வெற்றிக்கும் பங்களித்துள்ளனா்.

மேலும், சிசோடியா கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் பல மாநிலங்களில் போராட்டங்களை நடத்தினா். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சண்டீகா், தில்லி, போபால் மற்றும் பிற நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘அனைத்து எம்எல்ஏக்களும் அந்தந்தத் தொகுதிகளில் இருந்து 200 பேரை போராட்டத்திற்கு திரட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT