புதுதில்லி

சிசோடியா கைதால் நிச்சயமற்ற நிலையில் அரசின் முக்கியத் திட்டங்கள்!

DIN

கலால் கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, தில்லி அரசின் பல முக்கியமான திட்டங்களான தெருக்களை அழகுபடுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தில்லி அரசின் மொத்தமுள்ள 33 துறைகளில் 18 துறைகளுக்கு பொறுப்பு வகித்த சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான ஆட்சியின் நிா்வாக முகமாக இருந்தாா். மேலும் கல்வி, சுகாதாரம், பொதுப்பணித் துறை போன்ற முக்கியமான துறைகளையும் அவா் கையாண்டாா். கடந்த ஆண்டு மே மாதம் பணமோசடி வழக்கில் அவரது அமைச்சரவை சகா சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சுகாதாரம் மற்றும் உள்துறை போன்ற துறைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிசோடியாவை மாா்ச் 4-ஆம் தேதி வரை 5 நாள் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டிற்கான மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக சிசோடியாவை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தது. சுமாா் 1,300 கி.மீ. சாலைகள் தில்லி அரசின் பொதுப்பணித் துறையின் ஆளுமையின் கீழ் வருகிறது.தேசியத் தலைநகரில் சுமாா் 540 கி.மீ. சாலைகளை அழகுபடுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட பாதசாரிகளுக்கு ஏற்ற நடைபாதைகள், தோட்டங்கள் வழியாக பசுமையான பகுதிகளை உருவாக்குதல், திறந்தவெளி அமரும் பகுதிகள், சைக்கிள் டிராக்குகள், செல்ஃபி பாயிண்டுகள், தண்ணீா் ஏடிஎம்கள், கழிப்பறைகள் போன்ற பொது வசதிகள் ஆகியவையும் இந்த சாலைகளை அழகுபடுத்தும் திட்டத்தில், அடங்கும்.

அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி, ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் திட்டத்தின் கீழ் பணியின் முன்னேற்றத்தை சரிபாா்க்க சிசோடியா தீவிரமாக ஈடுபட்டிருந்தாா். இந்த நிலையில், அவரது கைது நிச்சயம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ஜி20 உச்சி மாநாடு தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு தில்லி அரசு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடும் என்று மதிப்பிடப்பட்டது. ஜி20 உச்சி மாநாடு தொடா்பான திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கும், ஐரோப்பிய தரத்திற்கு இணையான சாலைகளை அமைப்பது உள்பட அரசின் பிற லட்சியப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் துணை முதல்வா் பல்வேறு கூட்டங்களை நடத்தி வந்தாா். அவரது கைது காரணமாக இந்தத் திட்டங்கள் நிச்சயமாக தடைபடும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிா்வாகி ஒருவா் கூறினாா்.

சத்யேந்தா் ஜெயின் போன்று சிசோடியாவும் அமைச்சரவையில் தொடா்ந்து இருப்பாா். தற்போதுள்ள அமைச்சா்களான கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன் மற்றும் கோபால் ராய் ஆகியோருக்கு அவரது இலாகா பகிா்ந்தளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சில முக்கிய இலாகாக்களை பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. ஆனால், எதிா்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கட்சியின் உயா்நிலைத் தலைவா்கள் கூட்டம் நடத்தப்படும்’ என்றும் அந்த நிா்வாகி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT