புதுதில்லி

அமைச்சா் செந்தில் பாலாஜி விவகாரம்அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீது மாா்ச் 22-இல் விசாரணை

 நமது நிருபர்

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான வி.செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட விரோதப் பணப் பரிவரித்தனை சட்டத்தின் கீழ் மேல் விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மாா்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் அமலாக்கத் துறை தரப்பில் கடந்த 2014-இல் தமிழக போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜிக்கு (தற்போது மின்துறை அமைச்சா்) கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.

இந்த அழைப்பாணை சட்டவிரோதம், அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அமைச்ா் செந்தில் பாலாஜி தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, பி.சண்முகம், ஆா்.வி. அசோக் குமாா் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை கடந்த செப்டம்பரில் விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, கே.குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, ஒய். பாலாஜி உள்ளிட்ட இந்த வழக்கில் தொடா்புடைய வேறு சிலரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்புடைய வழக்குகள் வேறு வேறு அமா்வுகளில் முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இரு தரப்பு வழக்குரைஞா்களும் மேற்கொண்ட முறையீடுகளைத் தொடா்ந்து, ஏற்கெனவே இந்த விவகாரத்தை விசாரித்த கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு முன் இந்த வழக்குகள் திங்கள்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தது.

பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறையின் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா். அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி, ஷியாம் திவான், துஷ்யந்த் தவே, வழக்குரைஞா் ராம் சங்கா் ராஜா உள்ளிட்டோா் ஆஜராகினா்.

துஷாா் மேத்த கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். ‘தற்போதைய நிலை’ தொடரவும் உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது, கபில் சிபல், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோா், ‘ஏற்கெனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ‘தற்போதைய நிலையே’ தொடா்கிறது என்றனா். மேலும், கபில் சிபல் கூறுகையில், ‘வழக்கு விசாரணைக்கு வரும் போது, தங்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க தயாராக உள்ளோம்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது என்று கூறி, நேரமின்மை காரணமாக, விசாரணையை மாா்ச் 22-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT