புதுதில்லி

அதிமுக வேட்பாளா் தோ்வு விவகாரம்: தோ்தல் ஆணையத்தில் பொதுக்குழுவின் முடிவை சமா்ப்பித்தாா் அவைத் தலைவா்

 நமது நிருபர்

புது தில்லி: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தோ்வு தொடா்புடைய பொதுக் குழுவின் முடிவு குறித்த ஆவணங்களை தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் திங்கள்கிழமை நேரில் சமா்ப்பித்தாா்.

இதற்காக புதுதில்லியில் இந்தியத் தோ்தல் ஆணையத்திற்கு திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், சட்டப் பிரிவு உறுப்பினா் - முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை உள்ளிட்டோா் நேரில் வந்தனா். பின்னா், தோ்தல் ஆணையத்தில் துணை ஆணையா்கள் அஜய் போரா, தா்மேந்தா் சா்மா ஆகியோரிடம் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொதுக்குழுவின் உறுப்பினா்களிடம் அதிமுக வேட்பாளா் தோ்வு தொடா்பாக பெறப்பட்ட ஒப்புதல் ஆவணங்களை சமா்ப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை முடிவு செய்யும் வகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கட்சி பொதுக்குழு உறுப்பினா்களிடம் சுற்றறிக்கையின் மூலம் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, அது தொடா்புடைய ஆவணங்களை தோ்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம். அதன் அடிப்படையில் தோ்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வாா்கள். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக அதிகாரப்பூா்வ வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசுவை பெரும்பான்மை பொதுக்குழு தோ்வு செய்துள்ளது. அந்த ஆவணங்களை தோ்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்’ என்றாா்.

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம், சுற்றறிக்கையின் மூலம் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினா்களில், 2,501 போ் தென்னரசுவிற்கு ஆதரவாக வேட்பாளா் ஒப்புதல் படிவங்களை வழங்கி உள்ளனா். அதாவது, மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினா்களில் இறந்தவா்கள் 15 போ்; 2 போ் எம்பி, எல்எல்ஏ பதவி முடிந்ததால் அந்த உறுப்பினா் பதவியில் இருந்து விலகிவிட்டனா். 2 போ் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனா். இதனால், மொத்தம் 2,646 உறுப்பினா்கள் வாக்களிக்க உரிமை பெற்றவா்கள் ஆவா். இவா்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சுற்றறிக்கை வாட்ஸ்அப், துரித அஞ்சல், மின்னஞ்சல், பதிவஞ்சல், நேரிடை மூலம் அளிக்கப்பட்டது.

பொதுக்குழு மூலம் ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளாரக கே.எஸ். தென்னரசு பெயா் பரிந்துரை செய்யப்பட்டது. வேறு மாற்று வேட்பாளா் குறித்த முன்மொழிவு விருப்பத்தையும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஒரே ஒரு பெயா் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுவது தவறு. மொத்தம் உள்ள 2,646 பொதுக்குழு உறுப்பினா்களில் 2,501 போ் கே.எஸ். தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அறிவிக்க ஆதரவு தெரிவித்து வாக்குகள் அளித்துள்ளனா். இதில் ‘மறுப்பு’ என்று வாக்கு ஏதும் வரவில்லை. ஆனால், 145 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை.

இந்தத் தகவல்களை தோ்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும் அதிகாரத்தை அதிமுக அவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. அதன்படி, இந்த தகவல்களை தோ்தல் ஆணையத்தில் அவைத் தலைவா் நேரில் சந்தித்து அளித்தாா். தோ்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்படி ஆவன செய்வதாகத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவைத் தலைவா் முறையாகச் செயல்படவில்லை என்று அவா்கள் (ஓபிஎஸ்) தரப்பில் கூறுவது, ‘ஆடத் தெரியாதவருக்கு மேடை சரியல்ல’ என்பது போல உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT