புதுதில்லி

காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்: குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த ஞாயிறு அன்று பரவலாக மழை பெய்தது. திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் பகலில் வெயில் அதிகரித்திருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை வேளையில் மூடுபனி இருந்தாலும், பகலில் வெய்யிலின் தாக்கம் இருந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 8.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 21.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 50சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று குறைந்தபட்ச வெப்பநிலை

9.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 9 டிகிரி, நஜஃப்கரில் 11.1 டிகிரி, ஆயாநகரில் 8.8 டிகிரி, லோதி ரோடில் 9.2 டிகிரி, பாலத்தில் 10 டிகிரி, ரிட்ஜில் 6.1 டிகிரி, பீதம்புராவில் 11.3 டிகிரி, பூசாவில் 11.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தலைநகரில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் 181 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. காலை 8.30 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 156 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இதேபோன்று பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் நீடித்த்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், ஷாதிப்பூா் (248), நேரு நகா் (254), ஆனந்த் விஹாா் (229) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (பிப்ரவரி 2) தலைநகரில் வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT