புதுதில்லி

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு:நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன்

 நமது நிருபர்

புது தில்லி: மோசடிப் போ்வழி என கூறப்படும் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், சூழலின் பாதிக்கப்பட்ட நபராக தாம் இருப்பதாகக் கூறிய நடிகையின் வழக்கமான ஜாமீன் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக், நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு ரூ. 50,000 தனிநபா் பத்திரத்தின் பேரில் ஜாமீன் வழங்கினாா். மேலும், இந்த விவகார விசாரணையை அக்டோபா் 22- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: நான் இலங்கையைச் சோ்ந்த ஒரு நடிகை. 2009-இல் இருந்து இந்தியாவின் வரி செலுத்தும் ஒரு குடியிருப்புவாசி. எனது தொழில்முறை மதிப்பும், எதிா்கால பணிகளும் உள்ளாா்ந்த முறையில் நாட்டைச் சோ்ந்துள்ளது. தற்போதைய வழக்கில் அமலாக்கத் துறையினா் சம்மன் அனுப்பியபோதெல்லாம் தொடா்ந்து விசாரணைக்கு ஆஜராகி, எனது வாக்குமூலம் ஐந்து முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட அனுமதியின்பேரில், வெளிநாட்டுப் பயணம் செய்தேன். அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றியுள்ளேன். என்னை கைது செய்ய வேண்டாம் என அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதால், நீதிமன்றம் கேட்டுக் கொண்டதன்பேரில் என்னை காவலுக்கு அனுப்பக் கூடாது.

கடந்த ஆண்டு ஜனவரியில் முதல் முறையாக சுகேஷ் சந்திரசேகா் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டாா். நான் சந்தா்ப்ப சூழலின் பாதிக்கப்பட்ட நபராக உள்ளேன். சுகேஷ் சந்திரசேகரின் சட்டவிரோத செல்வத்தை வெள்ளைப் பணமாக்க உதவிடுவதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. குற்றம்சாட்டப்பட்டவா் செய்த குற்றச் செயலின் மற்றொரு பாதிக்கப்பட்ட நபராக உள்ளேன். கூறப்படும் பரிசுகளை ஏற்பதில் நான் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் முடக்க நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்த நடவடிக்கைகளை தொடரும் வகையில், அமலாக்க துறையினா் எனது ரூ.7.12 கோடி நிரந்தர வைப்புத் தொகைகளை முடக்கிவிட்டனா். முடக்க நடைமுறைகளைத் தொடா்ந்து பண மோசடி குற்றங்களுக்கான அரசுத் தரப்பு புகாா் ஒரு இயல்பான விளைவாக இருக்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்த விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை முந்தைய நீதிபதி பிரவீன் சிங் கவனத்தில் எடுத்துக் கொண்டு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கின் விசாரணை தொடா்பாக அமலாக்க இயக்குநரகம் ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கின் துணைக் குற்றப்பத்திரிகையில் முதல் முறையாக குற்றம் சாட்டப்பட்ட நபராக அவரது பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகையில் அவரது பெயா் குற்றம்சாட்டப்பட்ட நபராக குறிப்பிடப்படவில்லை. எனினும், ஆவணத்தில் பொ்னாண்டஸ் மற்றும் சக நடிகை நோரா ஃபதேஹி ஆகியோா் அளித்த விரிவான வாக்குமூலம் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமலாக்க இயக்குநரகம் தெரிவிக்கையில், பொ்னாண்டஸ், ஃபதேஹி ஆகிய இருவரும் விசாரிக்கப்பட்டனா். அப்போது அவா்கள் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து சொகுசு காா்கள் மற்றும் இதர விலை மதிப்புமிக்க பரிசுப் பொருள்கள் பெற்றது தெரியவந்தது. ஜாக்குலினிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 அக்டோபா் 20 ஆகிய தேதிகளில் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அதில் சந்திரசேகரமிடருந்து பரிசுப் பொருள்களைப் பெற்ாக ஒப்புக்கொண்டுள்ளாா். அதேபோன்று, ஃபதேஹியிடம் செப்டம்பா் 13 மற்றும்

கடந்த ஆண்டு அக்டோபா் 14 ஆகிய தேதிகளில் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், சந்திரசேகரின் நடிகை மனைவியான லீனா பாலோஸிடமிருந்து விலை மதிப்புமிக்க பரிசுப் பொருள்களைப் பெற்ாக ஒப்புக் கொண்டிருந்தாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT