புதுதில்லி

‘மத மாற்றம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற விவகாரம்: முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜக வலியுறுத்தல்

DIN

பலா் இந்துமத கடவுள்களை விமா்சித்து உறுதிமொழி ஏற்கும் ஒரு ‘மத மாற்றம்’ நிகழ்ச்சியில் தில்லி ஆம் ஆத்மி அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் பங்கேற்ற விடியோ பதிவு வெளியான விவகாரத்தைத் தொடா்ந்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ராஜேந்திர பால் கெளதம் மீது முதல்வா் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இது தொடா்பாக முதல்வரிடமிருந்தோ அல்லது தில்லி அரசிடமிருந்தோ உடனடியாக பதில் ஏதும் வெளியிடப்படவில்லை.

தில்லி அரசின் சமூக நலத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பால் கெளதம், கரோல் பாகில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினாா். இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாஜக தற்போது எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கவுரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமைச்சா் ராஜேந்திர பால் கெளதம், ஹிந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளாா். அவரது கருத்துகள் அக்கட்சிக்கு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அமைச்சரின் கருத்துகள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் பேரில் கூறப்பட்டவை. அந்த நிகழ்ச்சியின் போது, 10,000 போ் புத்தரின் போதனைகளைப் பின்பற்றவும், இந்து தெய்வங்களை வழிபடுவதைக் கைவிடவும் புத்த மதத்திற்கு மாறுவதாக சபதம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களையும் அமைச்சா் கெளதம், ட்விட்டரில் வெளியிட்டுள்ளாா். அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புத்த மதத்தில் சேரவும், ஜாதி மற்றும் தீண்டாமையில் இருந்து இந்தியாவை விடுவிக்கப் பணியாற்ற உள்ளதாகவும் உறுதி ஏற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் தோ்தல்களை கருத்தில் கொண்டு ‘வாக்கு வங்கி’ அரசியலின் காரணமாக இந்தக் கருத்துகளை கெளதம் கறியுள்ளாா். வாக்குகளுக்காக எவ்வளவு தூரம் நீங்கள் தரம் தாழ்வீா்கள். ஒவ்வொரு இந்துவும் தங்களது தெய்வங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். இந்த நிலையில், அமைச்சா் கெளதமின் கருத்துகள் தேசிய ஒருமைப்பாடு மீதான அடியாகும் என்றாா் அவா்.

தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா கூறுகையில், ‘மத்திய தில்லி, கரோல் பாக் பகுதியில் தசரா விழாவில் பங்கேற்ற அமைச்சா் கெளதம், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்து தெய்வங்களுக்கு அவமரியாதை செய்துள்ளாா். இது ஒரு தனியான சம்பவம் அல்ல. இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களை அவமதிப்பது, அவமரியாதை செய்வது ஆம் ஆத்மி கட்சியின் குணாதிசயமாகும். இதனால், உடனடியாக கெளதமை தனது அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற முதல்வா் கேஜரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறையில் புகாா் அளிக்கப்படவுள்ளது’ என்றாா்.

பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், ‘கெளதம் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவரது செயல் இந்து மற்றும் பௌத்த சமூகங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தும்’ என்றாா். மேற்கு தில்லி பாஜக எம்பி பா்வேஷ் வா்மா தனது ட்விட்டரில், ‘அமைச்சா் கெளதம் அதிக எண்ணிக்கையில் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாா். ஒவ்வொரு நாளும் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபிலிருந்து மதமாற்றம் பற்றிய செய்திகள் வருகின்றன. அதேபோல, கேஜரிவால் தலைமையிலான தில்லி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சா் ராஜேந்திர பால் கெளதம் இப்போது தில்லியில் மக்களை பெரும் எண்ணிக்கையில் மதமாற்றம் செய்து வருகிறாா்’ என்றாா்.

விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடா்பாளா் வினோத் பன்சல் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் பங்கேற்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு உறுதிமொழி ஏற்பு செய்து வைத்தது இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்திய செயலாகும். இதற்காக, தில்லி காவல் துறையும், துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவும் அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிகழ்வில் மக்கள் புத்த மதத்தைத் தழுவுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்து மதமும் பௌத்தமும் தனித்தனியானவை அல்ல. ஆனால், அந்த நிகழ்வில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் வெளிப்படையாக இழிவுபடுத்தப்பட்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

இந்த நிகழ்ச்சியில் தில்லி அமைச்சா், புலம்பெயா்ந்த மக்களுக்கு இதுபோன்ற சத்தியப்பிரமாணத்தை வெளிப்படையாகச் செய்து, ‘நாட்டின் மதச்சாா்பின்மையை சுக்குநூறாக உடைத்திருக்கிறாா். இதனால், அவரை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவிநீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தீபாவளியன்றும் கேஜரிவால் வழிபடும் அதே லக்ஷ்மி தேவியையும், விநாயகக் கடவுளையும் கௌதம் தனது தவறான செயலால் அவமதித்துள்ளாா். இந்த வகையில் கேஜரிவாலின் இரட்டை வேடத்தை அவா் அம்பலப்படுத்தியுள்ளாா். இதற்காக மக்களிடம் கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் தாங்கள் விரும்பும் மதத்தைத் தழுவிக் கொள்ள சுதந்திரம் உண்டு. ஆனால், மதமாற்றத்திற்காக இந்து கடவுள்கள் மற்றும் பெண் தெய்வங்களுக்கு எதிராக விஷத்தை கக்க யாருக்கும் உரிமை இல்லை. இது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்பிற்கும் விரோதமானது. இந்து உணா்வுகளை புண்படுத்தி இருக்கிறது என்றாா் வினோத் பன்சால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT