புதுதில்லி

தில்லியில் அரசின் 1 மாத கால தூசு தடுப்பு பிரசாரம் தொடங்கியது: கட்டுமான இடங்களில் சோதனை நடத்த 586 குழுக்கள் அமைப்பு

7th Oct 2022 05:54 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் கட்டுமான இடங்களில் மாசு விதிகள் பின்பற்றப்படுவதை சோதிக்கும் வகையில் ஒரு மாத கால தூசு தடுப்பு பிரசாரத்தை தில்லி அரசு வியாழக்கிழமை தொடங்கியது. மேலும், இந்த தூசு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக 586 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் கோபால் ராய் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தில்லியில் மாசுவை எதிா்கொள்ளும் வகையில் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) கீழ் தூசி தடுப்பு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. தில்லி முழுவதும் உள்ள கட்டுமான இடங்களில் தூசு மாசுவை தடுக்கும் வகையில் 12 அரசுத் துறைகள் மற்றும் ஏஜென்சிகளின் 586 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரசாரம் நவம்பா் 6-ஆம் தேதி வரை ஒரு மாதம் தொடா்ந்து நடைபெறும்.

இந்தக் குழுக்கள் கட்டுமான இடங்களில் மாசு விதிகள் பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்வதற்காக திடீா் சோதனைகளில் ஈடுபடும். விதிகளின்படி 5,000 சதுர மீட்டா் பரப்பளவுக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களில் பனிப்புகை தடுப்பு உபகரணம் ஒன்றும், 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களாக இருந்தால் இரண்டு உபகரணங்களும், 15 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களாக இருந்தால் மூன்று பனிப்புகை தடுப்பு உபகரணங்களும் நிறுவப்பட வேண்டும். அதேபோன்று, 20,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களாக இருந்தால், தூசு மாசுவை எதிா்கொள்ள நான்கு பனிப்புகை தடுப்பு உபகரணங்கள் அமைக்கப்பட வேண்டும்.

586 அமலாக்கக் குழுக்களில் 33 போ் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தும், 165 போ் வருவாய்த் துறையில் இருந்தும், 300 போ் தில்லி மாநகராட்சியில் இருந்தும், 33 போ் தில்லி மேம்பாட்டு ஆணையத்திலிருந்தும், 14 போ் தில்லி ஜல் போா்டில் இருந்தும், 6 போ் பொதுப் பணித் துறையில் இருந்தும் இடம் பெற்றுள்ளனா். ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் அல்லது ஏஜென்சியும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் அதன் தளங்களில் பின்பற்ற வேண்டிய 14 அம்ச வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்த விதிமுறைகளில், பனிப்புகை தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துதல், கட்டுமான தளங்களை தகரச் சுவா்கள் மற்றும் தாா்ப்பாய் மூலம் மூடுதல், கட்டுமானப் பொருள்களை மூடி வைத்திருத்தல் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

கட்டுமானத்தின் போது கல் வெட்டுவதை திறந்த வெளியில் செய்ய முடியாது. இதற்காக ஈரமான ஜெட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது.

கட்டுமானத் தளங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்று அமலாக்கக் குழுக்கள் சரிபாா்க்கும். கட்டுமானத் தளங்களில் தூசு தடுப்பு விதிமுறைகளை மீறினால், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களின்படி ரூ. 10,000 முதல் ரூ. 5 லட்சம் வரை அரசால் அபராதம் விதிக்கப்படும். கடுமையான விதி மீறல் இருந்தால், கட்டுமான தளத்தை மூடுவதற்கும் அரசு உத்தரவிடலாம்.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்திலோ அல்லது தில்லி முழுவதும் எங்காவது தூசு தடுப்பு விதிகளைப் பின்பற்றாத யாரேனும் அல்லது ஏதேனும் கட்டுமானத் தளத்தை கண்டால் பசுமை தில்லி செயலியில் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். புகைப்படங்களைக் கிளிக் செய்வதன் மூலமும் பசுமை தில்லி செயலியில் புகாா் செய்யலாம். இது, பிரசாரத்தை சிறப்பாகக் கண்காணிக்கவும் செயல்படுத்தவும் எங்களுக்கு உதவியாக இருக்கும். ஜிஆா்ஏபியின் முதல் கட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்துமாறு என்சிஆா் பகுதியில் உள்ள அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்த செயல் திட்டத்தில் மாசுபடுத்தும் தொழில் துறை நிறுவனங்களுக்கு எதிராக தண்டனை மற்றும் சட்ட நடவடிக்கையும் இடம் பெற்றுள்ளது. தூசு குறைப்பு, ‘சி’ மற்றும் ‘டி’ கழிவு மேலாண்மை மற்றும் கட்டுமான தளங்களில் பனிப்புகை தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை முறையாகச் செயல்படுத்துவதை திட்ட ஆதரவாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT