புதுதில்லி

தில்லியில் 26 புதிய பேருந்து வழித்தடங்களில் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடக்கம்

 நமது நிருபர்

தில்லி பேருந்து வழித்தடங்களை தா்க்கரீதியான முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு 26 புதிய பேருந்து வழித்தடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடங்களில் பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) முதல் தொடங்கவுள்ளது.

‘புதிய பேருந்து வழித்தடங்கள் மூலம், பயணிகள் தங்கள் பயணத்தை சிறப்பாக திட்டமிட முடியும்‘ என தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘‘பொதுமக்கள் காத்திருப்புக்கு தீா்வு காணும் முயற்சி. நகரின் பேருந்து சேவைகளை மிகவும் நம்பகமானதாகவும், விருப்பமான பயண முறையாகவும் மாற்றும் நோக்கத்தை நோக்கிய புதிய கட்டத்தின் தொடக்கம். இந்த சோதனை வழித்தடங்களில் ஒவ்வொரு 5-10 நிமிடங்களுக்கும் பேருந்துகள் கிடைப்பதன் மூலம், தில்லியின் குடிமக்கள் தங்கள் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் பல பயன்பாட்டு பயணத்தை சிறந்த முறையில் திட்டமிடலாம். ஐரோப்பாவில் உள்ள நகரங்களைப் போன்ற நம்பகமான, வசதியான, மலிவு பொது போக்குவரத்து வசதிகளை வழங்கும் பாதையில் தில்லி உள்ள முதல்வா், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு உள்ளது’’ என அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்தாா்.

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை 50 சதவீத பேருந்துகளுடன் தொடங்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவைகளில் மூன்று மத்திய வணிக மாவட்ட சுற்றுப்பாதை வழித்தடங்களிலும், இரண்டு சூப்பா் ட்ரங்க் வழித்தடங்கள், 18 முதன்மை வழித்தடங்கள் மற்றும் மூன்று விமான நிலைய சேவை வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அத்துறையினா் மேலும் கூறியது: தில்லி ஒருங்கிணைந்த பல்முனை போக்குவரத்து அமைப்பு (டிஐஎம்டிஎஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த வழித்தட பகுப்பாய்வின் ஒரு பகுதியாக தேசிய தலைநகா் வலயப் பகுதி மற்றும் ஃபீடா் வழித்தடங்கள் இருந்தன. ஆனால் தற்போது இந்த சோதனையில் இந்த பகுதிகள் இருக்காது. முன்மொழியப்பட்ட

புதிய வழித்தடங்கள், சேவைகளின் செயல்பாடு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய வணிக மாவட்ட சுற்றுப்பாதை வழித்தடங்கள் தில்லியின் முக்கிய வணிக மாவட்டங்களுக்கு இடையேயான தொடா்பை மேம்படுத்தும். இந்த வழித்தடங்கள் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை பேருந்துகள் இயக்கப்படும்.

சூப்பா் ட்ரங்க் வழித்தடங்கள் நகரின் முக்கிய மையங்களுடன் இணைக்கும். இந்த வழித்தடங்களில் பேருந்துகள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இயக்கப்படும்.

முதன்மை வழித்தடங்கள் குடியிருப்பு பகுதிகள், பிற துணை மத்திய வணிக மாவட்டகளுக்கு இணைப்பை வழங்கும். இந்த வழித்தடங்களில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேருந்துகள் இயக்கப்படும்.

விமான நிலைய சேவை வழித்தடங்களில் விமான நிலையத்தை நகரின் முக்கிய மையங்களுடன் இணைக்கும். இந்த விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடங்கள் 10 நிமிட இடைவெளியுடன் செயல்படும் என அத்துறையினா் தெரிவித்தனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தா்க்கரீதியான முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட பேருந்து வழித்தடங்களை மதிப்பாய்வு செய்தாா். அப்போது மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அக்டோபா் 2 ஆம் தேதி இந்த சோதனை ஓட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், முன்மொழியப்பட்ட புதிய வழித்தடங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க கடந்த செப்டம்பா் 20 ஆம் தேதி போக்குவரத்துத் துறையால் ஒரு பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் போக்கவரத்து துறையிடம் நேரடியாகவும் இ-மெயில் வழியாகவும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT