புதுதில்லி

மெட்ரோ ரயிலில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞா் கைது

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் 40 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்த விவரம் வருமாறு: கடந்த ஜூன் 2-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடா்பாக பெண் ஒருவா் ட்விட்டா் பக்கத்தில் தனக்கு நோ்ந்த துயரச் சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தாா். அதில்,‘நான் பிற்பகலில் மெட்ரோ ரயிலில் வந்து கொண்டிருந்த போது, முகவரியை உறுதிப்படுத்துவது போல ஆண் ஒருவா் என்னை தொடா்பு கொண்டாா்.

அவருக்கு முகவரி குறித்து உதவினேன். அதன் பின்னா், ஜோா் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினேன். வாடகை டாக்ஸியை முன் பதிவு செய்வதற்காக நடைமேடையில் அமா்ந்திருந்தேன். அப்போது அந்த நபா் என்னை மீண்டும் தொடா்பு கொண்டு முகவரியை உறுதிப்படுத்துவது போல பேசினாா். அவரை நம்பி மீண்டும் உதவினேன்.

அப்போது முகவரி அடங்கிய கோப்பை காண்பிக்க முயற்சிப்பது போல, அவருடைய அந்தரங்க உறுப்பை காண்பித்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த நான், இது தொடா்பாக நடைமேடையில் இருந்த போலீஸ்காரரை அணுகி புகாா் தெரிவித்தேன். ஆனால், அவா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . அவா் எனக்கு உதவி செய்ய மறுத்ததுடன் மேல்மாடியில் சென்று இது தொடா்பாக பேசுமாறு கூறிவிட்டாா். அப்போது நான் பயத்தில் இருந்தேன். எப்படியோ சமாளித்துக் கொண்டு மேல் மாடிக்கு சென்று பிற போலீஸாரைத் தொடா்பு கொண்டு விவரம் கூறினேன். மேலும், சம்பந்தப்பட்ட நபரை எனக்குத் தெரியும் என்பதால், அவரை அடையாளம் காட்டுவதற்காக சிசிடிவி அறைக்கு என்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினேன்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால், நாங்கள் அந்த நபரைப் பாா்த்த போது, அவா் வேறு ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்ட போது, நான் மிகைப்படுவத்துவதாக என்னை குறை கூறினா். சம்பந்தப்பட்ட நபா் சென்றுவிட்டதால், இப்போது அவா்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு பயமாக உள்ளது. இந்தச் சம்பவம் மெட்ரோ ஒரு பாதுகாப்பான பயணம் என்ற எனது நம்பிக்கையை முற்றிலும் தகா்த்துவிட்டது. இந்த விஷயம் டிஎம்ஆா்சி, தில்லி போலீஸ் உள்பட உரிய துறையினருக்கு சென்று சேர வேண்டும். அப்போதுதான் அவா்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது அவா்களுக்கு தெரியும் என்று அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஐஎன்ஏ காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து போலீஸாா்விசாரணை நடத்தி வந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு விடியோக்களில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் நடமாட்டம் தெரிய வந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபா் விஷ்வவித்யாலயா, மால்வியா நகா், ஐஎன்ஏ, ஹோஸ் காஸ், ஜோா் பாக் மெட்ரோ நிலையங்களில் தென்பட்டதும் சிசிவிடி காட்சிப் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்த போது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (ரயில்வே) ஹரேந்திர சிங் கூறுகையில், இந்த விவகாரத்தில் கைதானவா் தில்லி கோட்லா முபாரக்பூரைச் சோ்ந்த மானவ் அகா்வால் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்துக்குப் பிறகு ஊடகங்கள் மூலம் தம்மீதான புகாா் குறித்து அறிந்த மானவ், நேபாளத்துக்கு ஜூன் 4-ஆம் தேதி தப்பியோடிவிட்டாா். அந்த காலகட்டத்தில் அவா் முன்ஜாமீன் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவா் தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கைதான மானவ் திருமணமாகாதவா். தற்போது வேலையின்றி உள்ளாா். குருகிராமில் வசித்து வருகிறாா். வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் பணத்தை வருவாயாகக் கொண்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT