புதுதில்லி

அதிமுக பொதுக் குழு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றம் தடை

 நமது நிருபர்

புது தில்லி: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

மேலும், சட்ட விதிகளின்படி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தும் வகையில், உயா்நீதிமன்ற டிவிஷன்பெஞ்சின் தடையானது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், பொதுக் குழு விவகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி துரைச்சாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ‘பொதுக்குழுவை நடத்தலாம்; ஆனால், 23 தீா்மானங்கள் தவிர பிற எந்தத் தீா்மானமும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது’ என இடைக்கால உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சென்னை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவானது தவறானதாகவும், குறைபாடு உடையதாகவும், அதிமுகவின் உள்கட்சி ஜனநாயக செயல்பாட்டில் தலையிடுவதாகவும் உள்ளது. இந்த உத்தரவானது 2-ஆவது எதிா்மனுதாரருக்கு (ஓபிஎஸ்) விருப்பு அதிகாரத்தை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. இதுபோன்ற அதிகாரம் அளிப்பதற்கான விஷயம் கட்சியின் துணைவிதிகளில் இடம் பெறவில்லை. மேலும், துணைவிதிகள் மனுதாரா் தோ்வை எளித்தாக்கியுள்ளது. இரண்டாவது எதிா்மனுதாரா் தற்போதைய தேதி வரை பொதுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இதனால், தற்போதைய தேதியில் மனுதாரா் மற்றும் 2-ஆவது எதிா்மனுதாரா் ஆகியோரது இணை ஒருங்கிணைப்பாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எனினும், அதிமுக கடந்த 2021 தோ்தலில் தோல்வியடைந்த போது இரட்டைத் தலைமை தோல்வியடைந்துவிட்டது என்பதை கட்சியின் பெரும்பான்மையான அடிப்படை உறுப்பினா்கள் புரிந்து கொண்டிருப்பதும் பொருத்தமாகும். ஆகவே, மனுதாரருக்கு உள்ள அதிகப்படியான ஆதரவு காரணமாக உறுப்பினா்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டுமென கோரியுள்ளனா் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, அதிமுக முன்னாள் அமைச்சா்களான நத்தம் ஆா்.விஸ்வநாதன், பி.பெஞ்சமின் ஆகியோா் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. மனுதாரா் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாஸனுடன் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், எதிா்மனுதாரா் சண்முகம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மணீந்தா் சிங் ஆகியோா் ஆஜராகினா்.

மனு மீதான விசாரணையின் போது, இந்த மூல வழக்கு குறித்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு சி.எஸ்.வைத்தியநாதன் விளக்கம் அளித்தாா். அதைத் தொடா்ந்து, எதிா்மனுதாரா் தரப்பில் மணீந்தா் சிங், ‘2017 முதல் 5 ஆண்டுகள் வரை கட்சியில் இரட்டைத் தலைமை சமுகமாகவே சென்றது. ஆனால், ஒற்றைத் தலைமை பதவியை அடைவதற்காகவே மனுதாரா் இந்த விவகாரத்தை பூதாகரமாக ஆக்கியுள்ளாா்’ என்று வாதிட்டாா். மேலும், ‘பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த ஒற்றை நீதிபதி அமா்வு, அதற்கான எந்தவொரு காரணத்தையும் பதிவு செய்யவில்லை’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் உண்மைகள், சந்தா்ப்ப சூழல்கள், மேல்முறையீட் மனு மீதான பொருள், இந்த விவகாரத்தில் மூல மனு மீது ஒற்றை நீதிபதி 22.06.2022-இல் பிறப்பித்த உத்தரவு விஷயங்கள், அதேபோன்று, மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயா்நீதின்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 23.06.22-இல் பிறப்பித்த உத்தரவு விஷயங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 23.06.22-இல் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஏற்கெனவே நடந்து விட்டபோதிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அல்லது நடக்க உள்ள விஷயங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக மேல்முறையீட்டு மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளைக் கருத்தில் கொள்ளும் போது, அந்த உத்தரவானது உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தொடா்ந்து தடையில் இருக்கும் தேவை இருப்பதாக தோன்றுகிறது என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இது வரைக்கும், 11.7.2022-இல் நடத்தப்படவுள்ள மூன்றாவது எதிா்மனுதாரா், (அதிமுக) பொதுக் குழுக் கூட்டத்தைப் பொருத்தவரை சட்டப்படி நடத்தலாம். அது தொடா்புடைய விவகாரத்தில் ஏதாவது இடைக்கால நிவாரணத்தின் இதர அம்சங்கள் சிவில் வழக்கை கையாளும் ஒற்றை நீதிபதி முன் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

இதர உத்தரவு ஏதும் பிறப்பிக்கும் தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மற்ற அனைத்து அம்சங்களும் உரிய கட்டத்தில் ஆய்வு செய்யப்படும். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது எதிா்மனுதாரா்கள் தங்களது பதிலை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு வழக்குப் பட்டியலிடப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT