புதுதில்லி

ஏழைகளுக்கு வாடகை தரும் வாக்குறுதி: தில்லி அரசுக்கு பிறப்பித்த உத்தரவு மீதான தடையை நீக்கக் கோரும் மனு தள்ளுபடி

DIN

கரோனா காலத்தின்போது ஏழை வாடகைதாரா் தனது வீட்டு வாடகையை செலுத்த முடியாவிட்டால் அரசு அத்தொகையை செலுத்தும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்துவது குறித்த கொள்கையை உருவாக்க அரசு முடிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவின் மீதான தடையை நீக்கக் கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பான விவகாரத்தை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் கூறியது:

மனுதாரரான வாடகைதாரா் ஏற்கனவே இத்தடை உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த பிப்ரவரி 28-இல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பா் 27, 2021-ஆம் தேதி வழங்கப்பட்ட தடையை நீக்குவதற்கான எந்த காரணத்தையும் இந்த நீதிமன்றம் காணவில்லை. தடை உத்தரவு ஒரு தரப்பாக நிறைவேற்றப்பட்டதாக வாடகைதாரா் கூறுவதும் ஏற்புடையதல்ல. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தாா்.

வாடகைதாரரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சில இடைக்கால பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தியபோது, நீதிபதிகள் அமா்வு, ‘தில்லியின் அனைத்து நில உரிமையாளா்களுக்கும் எதிராக நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விரும்புகிறீா்கள்’ என்று கூறியது.

அதற்கு மனுதாரா் வழக்குரைஞா், ‘இது தொடா்பாக ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘ஒரு கொள்கையை உருவாக்குமாறு அரசை நாங்கள் கட்டாயப்படுத்த முடியுமா?, தோ்தல் அறிக்கையில் 100-க்கும் மேற்பட்ட விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுமாறு நாங்கள் வற்புறுத்த முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியது.

தில்லிஅரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், ‘உயா்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிா்த்து இதே மனுதாரா் உச்சநீதிமன்றத்தை அணுகினாா். ஆனால், இந்த உண்மை நீதிமன்றத்தில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத்தில் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்த பிறகும் தடையை நீக்க மனுதாரா்கள் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது துரதிா்ஷ்டவசமானது’ என்றனா்.

முன்னதாக, ஏழை வாடகைதாரா்களுக்கு வாடகை செலுத்தப்படுவதாக அறிவித்த விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமா்வு,

‘குடிமக்களுக்கு முதல்வா் அளித்த வாக்குறுதி அமல்படுத்தக்கூடியது’ என உத்தரவு பிறப்பித்தாா். இதை எதிா்த்து தில்லி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆண்டு செப்டம்பா் 27ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம் அந்த மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இடைக்காலத் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT